Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மனு பாக்கர் மற்றும் யாஷஸ்வினி தேஸ்வால் ஏமாற்றம்..!
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் யாஷஸ்வினி தேஸ்வால் ஆகியோர் தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் நேற்று மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகிய இருவரும் தகுதிச் சுற்றுடன் வெளியேறினர். அதன்பின்னர் நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியா சார்பில் சவுரப் சௌதரி மற்றும் அபிஷேக் வெர்மா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களில் அபிஷேக் வெர்மா தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சவுரப் சௌதரி தகுதிச்சுற்றில் முதல் இடம்பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். எனினும் இறுதிப் போட்டியில் 7ஆம் இடம் பிடித்து அவரும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இரண்டாவது நாளான இன்று மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் மனு பாக்கர் மற்றும் யஸ்சாஸ்வினி தேஷ்வால் ஆகியோர் பங்கேற்றனர். இவர் இருவரும் முதலில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் பங்கேற்றனர். அதில் மனு பாக்கர் 98,95,94,95,98,95 என மொத்தமாக 575 புள்ளிகள் பெற்று 12ஆவது இடத்தை பிடித்தார். அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனையான யஸ்சாஸ்வினி தேஷ்வால் 94,98,94,97,96, 95 என மொத்தமாக 574 புள்ளிகள் பெற்று 13ஆவது இடத்தை பிடித்தார். தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற முடியும். இதனால் மனு பாக்கர் மற்றும் யாஷஸ்வினி தேஸ்வால் ஆகிய இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
Both Manu Bhaker and Yashaswini Deswal fails to make the top-8 and misses out on the finals.
— India 🇮🇳 at #Tokyo2020 (@IndiansportFeed) July 25, 2021
Manu Bhaker - 12th position
Yashaswini Deswal - 13th position #Shooting #IndiaAtTokyo2020
ஏற்கெனவே முதல்நாளான நேற்றும் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தனர். இந்தச் சூழலில் இன்றும் அவர்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர். அடுத்தத்தாக இன்று காலை 9.30 மணியளவில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் வந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுவரை நடந்து முடிந்த 5 துப்பாக்கிச் சுடுதல் பிரிவு போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். இது துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:டென்னிஸ், பேட்மிண்டனில் நம்பிக்கை அளிக்கும் இந்தியாவின் இளம் வீரர்கள்