Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் : வெற்றியுடன் தொடங்கினார் பி.வி.சிந்து..!
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் இன்று தனது குரூப் பிரிவு முதல் போட்டியில் பி.வி.சிந்து வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் குரூப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரர் எதிர்த்து விளையாடினார். அதில் 12-21,14-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி ஆகியோர் குரூப் போட்டியில் பங்கேற்றனர். அவர்கள் அந்தப் போட்டியில் சீன தைப்பேவைச் சேர்ந்த வீரர்களை எதிர்த்து விளையாடினர். இந்த போட்டியில், 21-16, 16-21, 27-25 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் மகளிருக்கான குரூப் போட்டி இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து பங்கேற்றார். இவர் தன்னுடைய முதல் குரூப் போட்டியில் இஸ்ரேல் நாட்டின் கெசினா போலிகர்போவாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்தியாவின் பி.வி.சிந்து ஆதிக்கம் செலுத்தினார். 13 நிமிடங்களில் முதல் கேமை 21-7 என்ற கணக்கில் வென்றார்.
A routine 21-7, 21-10 win for the World Champion & Rio Olympics silver medallist PV Sindhu in the group stage match. #Badminton #IndiaAtTokyo2020 pic.twitter.com/X00aaaxLgJ
— India 🇮🇳 at #Tokyo2020 (@IndiansportFeed) July 25, 2021
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமில் மீண்டும் சிந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து எதிரணி வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார். 16 நிமிடங்கள் நடைபெற்ற இரண்டாவது கேமை 21-10 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் 21-7,21-10 என்ற கணக்கில் 28 நிமிடங்களில் வென்று அசத்தினார்.
அடுத்த போட்டியில் பி.வி.சிந்து ஹாங்காங் வீராங்கனை செங்கை எதிர்த்து விளையாட உள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியிருந்தார். அதில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரின் இடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். ஆகவே இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இவர் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவிற்கு தரவரிசையில் 6ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை காலிறுதிச் சுற்றில் தான் பி.வி.சிந்துவிற்கு மிகவும் சவாலான போட்டிகள் உள்ளன. அதில் அவர் ஜப்பான் அல்லது சீன தைபே வீராங்கனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதை சிறப்பாக எதிர்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.