Tokyo Olympic 2020: ‛நீ பாதி நான் பாதி’ ஒலிம்பிக் தங்கத்தை பகிர்ந்து கொண்ட இரு நாட்டு வீரர்கள்!
வரலாற்று சிறப்புமிக்க அந்த தருணத்தை இரு நாட்டு வீரர்கள் மட்டுமின்றி, இரு நாட்டு ரசிகர்களும், உலக ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தங்கமா, வெள்ளியா, வெண்கலமா… எந்த பதக்கம் கிடைத்தாலும் அந்த வெற்றிக்கு பின்னால், அந்த வீரர் வீராங்கனையின் பல வருட பயிற்சியும், முயற்சியும் இருக்கும். ஒலிம்பிக்கில் ஒரு வீரர் அல்லது வீராங்கனை பதக்கம் வென்றுவிட்டால், அது அவர் சார்ந்த நாட்டுக்கு கொண்டாட்டம் கலந்த பெருமைமிகு தருணமாக இருக்கும். இந்த சூழலில், இரு நாட்டு வீரர்களும் தங்கப்பதக்கத்தை பங்கு போட்டுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது டோக்கியோ ஒலிம்பிக்கில்!
ஆகஸ்டு 1, சர்வதேச நண்பர்கள் தினம். உலகெங்கிலும் நண்பர்கள் தின வாழ்த்து பரிமாற்றங்கள் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்களாகவும், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளாகவும் உலா வந்து கொண்டிருந்தன. அப்போது, ஒலிம்பிக் தடகள உயரம் தாண்டுதல் விளையாட்டில் கத்தாரின் முதாஸ் எஸ்ஸா பர்ஷிமும், இத்தாலியின் கியன்மார்கோ தம்பேரியும் 2.37 மீட்டர் தாண்டி முதல் இடத்தில் சமநிலையில் முடித்தனர்.
Fave moment of the Olympics so far. Barshim (Qatar) and Tamberi (Italy) were tied in the high-jump final. The official is there talking about a prospective jump-off, but Barshim asks immediately: "Can we have two golds?" One look, no words exchanged, they know they're sharing it. pic.twitter.com/E3SneYFocA
— Andrew Fidel Fernando (@afidelf) August 1, 2021
இப்போது யாருக்கு தங்கப்பதக்கத்தை அளிப்பது?
டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. ஆனால், டை பிரேக்கர் சுற்றில் இருவரும் சரியாக தாண்டாத நிலையால், வெற்றியாளரை தீர்மாணிப்பதற்காக மீண்டும் ஒரு முறை கடைசியாக தாண்டுகிறீர்களா என நடுவர் இரு வீரர்களிடமும் கேட்கிறார்.
இந்த தருணத்தில், இரு நாட்டு அரசும், ரசிகர்களும் மீண்டும், தத்தமது வீரர் மீண்டும் ஒரு முறை உயரம் தாண்டி தங்கத்தை எடுத்து வர வேண்டும் என வேண்டியிருப்பர். ஆனால், அங்கு நடந்தது வேறு! யாரும் எதிர்பார்க்காதது!
அப்போது, ”இரு தங்கப்பதக்கங்கள் தருவதற்கு வாய்ப்பிருக்குமா?” என பர்ஷிம் கேட்கிறார். அதற்கு நடுவர்கள் ‘ஓக்கே’ சொல்ல, அவ்வளவுதான் அந்த நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியது. பர்ஷிம் தம்பேரியை பார்த்து ‘ஓக்கேவா’ என கேட்க, அவரும் சரி என செய்க செய்ய, ஒலிம்பிக் போட்டியின் முதல் இடத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க அந்த தருணத்தை இரு நாட்டு வீரர்கள் மட்டுமின்றி, இரு நாட்டு ரசிகர்களும், உலக ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால், ஒலிம்பிக் போட்டி களத்தில் பூத்தது இல்லை இவர்களது நட்பு. ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் தம்பேரியின் ஒலிம்பிக் கனவு தள்ளிப்போனது. அப்போது, அவரை ஊக்கப்படுத்தியது பர்ஷிம்தான். களத்தில், இருவரும் எதிரணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே விளையாட்டை நேசிக்க கூடிய, ஒரே கனவை துரத்திய இரு நண்பர்களாகவே பழகி உள்ளனர். 2017-ம் ஆண்டு பர்ஷிமிக்கு கால் முறிவு ஏற்பட்டபோது, தம்பேரி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தியுள்ளார், மீண்டு வர உதவி செய்துள்ளார்.
இப்படி ஒருவருக்கொருவர், உதவி செய்து கொண்டும், பயிற்சி செய்து கொண்டும் ஒலிம்பிக் கனவை விரட்டிய இரு வீரர்கள், ஒரே போட்டியில், ஒரே அளவு தூரத்தை தாண்டி, ஒரே இடத்தை பிடித்து, பதக்கங்களை பகிர்ந்து கொண்டது இந்த ஒலிம்பிக்கின் ஆகச்சிறந்த தருணம். வாழ்த்துகள் நண்பர்களே!