Tokyo Olympics: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அமித் பங்கால் ஏமாற்றம் !
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 52 கிலோ குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் பங்கேற்றார். இந்த எடைப்பிரிவில் அமித் பங்கால் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் ஆவார். இவருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் இன்று அமித் பங்கால் கொலம்பியா நாட்டின் மார்டினஸ் ரிவாஸை எதிர் கொண்டார். இதில் முதல் ரவுண்டில் சிறப்பாக விளையாடிய அமித் பங்கால் கொலம்பியா வீரரை எளிதாக எதிர் கொண்டார். முதல் ரவுண்டில் அதிகமான புள்ளிகளை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ரவுண்டில் கொலம்பியா வீரர் சிறப்பாக வந்தார். அந்த ரவுண்டில் கொலம்பியா வீரர் அதிக புள்ளிகள் பெற்றார். இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி ரவுண்டில் கொலம்பியா வீரர் சிறப்பாக செயல்பட்டார். இதனால் 4-1 என்ற கணக்கில் கொல்ம்பியா வீரர் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து அமித் பங்கால் ஏமாற்றம் அளித்தார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் விளையாடினார். அவர் சீன தைபேயின் நியன் செனை எதிர்த்து விளையாடினார். அதில் 4-1 என்ற கணக்கில் லோவ்லினா வெற்றி பெற்றார். அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறினால் வெண்கலப்பதக்கம் உறுதியாகிவிடும். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டையில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை லோவ்லினா உறுதி செய்தார்.
Heartbreak folks 💔
— India_AllSports (@India_AllSports) July 31, 2021
India's big medal hope & top seed Amit Panghal eliminated in 2nd round (52kg); loses to Rio Olympic Silver medalist 1:4.
Amit had received 1st round Bye. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/97zTQfcrrT
மேலும் ஆடவர் 91+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் பங்கேற்றார். அவர் இரண்டாவது சுற்றில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ ப்ரோவூனை எதிர்த்து விளையாடினார். இறுதியில் 4-1 என்ற கணக்கில் சதீஷ் குமார் வென்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் பிரிவில் மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ)ஆகிய மூவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். மகளிர் பிரிவில் மேரி கோம்(51 கிலோ) மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ) ஆகிய இருவரும் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் இரண்டாவது சுற்றில் பூஜா ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பூஜா ராணி அல்ஜிரியா நாட்டைச் சேர்ந்த செயிப் இசார்க்கை எதிர்த்து சண்டை செய்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜிரியா வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் காலிறுதிச் சுற்றில் பூஜா ராணி சீன வீராங்கனையை எதிர்த்து சண்டை செய்ய உள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.25 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் வில்வித்தை: மூன்றாவது சுற்றில் ஜப்பான் வீரரிடம் அடானு தாஸ் தோல்வி!