Tokyo Olympics 2020: டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கியில் ஜெர்மனியிடம் இந்தியா தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடியது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி இன்று தனது முதல் போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி உலக தரவரிசையில் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி இந்திய அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி இன்று தனது இரண்டாவது குரூப் போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு அணியின் வீராங்கனைகளும் நன்றாக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். முதல் கால்பாதியின் 7ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய ஜெர்மனி முதல் கோலை அடித்தது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. முதல் கால்பாதியின் முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கால்பாதியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டனர்.
இதனால் அதிக வாய்ப்பு ஜெர்மனி அணிக்கு கிடைத்தாலும் அவை எதுவுமே கோலாக மாறவில்லை. மேலும் இந்திய வீராங்கனைகள் தங்களுக்கு கிடைத்த சில வாய்ப்புகளையும் தவறவிட்டனர். இதனால் முதல் பாதியின் முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற முன்னிலையுடன் சென்றது. மூன்றாவது கால்பாதியின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து பெனால்டி ஸ்டோர்க் வாய்ப்பு கிடைத்தது. அதை இந்தியாவின் குர்ஜித் கவுர் கோலாக மாற்ற தவறினார். அதன்பின்னர் ஜெர்மனி அணி ஒரு ஃபில்டு கோல் அடித்தது. இதனால் ஜெர்மனி அணி 2-0 என முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து நான்காவது கால்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கிடைக்க வாய்ப்பை கோலாக மாற்ற தவறினார்கள். இறுதியில் ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி மகளிர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது.
#TOKYO2020 #STRONGERTOGETHER #HOCKEYINVITES @DieDanas v @TheHockeyIndia pic.twitter.com/zkQ0A2BKQR
— International Hockey Federation (@FIH_Hockey) July 26, 2021
3ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்திய மகளிர் அணி அடுத்த போட்டியில் பிரிட்டன் அணிக்கு எதிராக நாளை மறுநாள் விளையாடுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. குரூப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்திய மகளிர் அணி ஜெர்மனி, பிரிட்டன், ஐயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடம் ஏ குரூபில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணிக்கும் இன்னும் 3 போட்டிகள் மிச்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛இந்தியர்களே என்னை மன்னித்துவிடுங்கள்” - பவானி தேவி உருக்கம்