Tokyo Olympics: ஒலிம்பிக் குண்டு எறிதல் : இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் பைனல் வாய்ப்பை இழந்து ஏமாற்றம்..!
டோக்கியோ ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தஜிந்தர் சிங் தூர் தகுதிச் சுற்றில் பங்கேற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இன்று ஆடவருக்கான குண்டு எறிதல் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தஜிந்தர் சிங் தூர் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 21.20 மீட்டருக்கு மேல் எறிந்தால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம். அப்படி இல்லையென்றால் இரண்டு குரூப் பிரிவின் தகுதிச் சுற்றுகளும் முடிவடைந்த பிறகு நீண்ட தூரம் வீசிய முதல் 12 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்தியாவின் தஜிந்தர் சிங் தூர் ஏ பிரிவு குரூப்பில் தகுதிச் சுற்றில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் ஒவ்வொரு வீரருக்கும் 3 வாய்ப்புகள் வழங்கப்படும்.
அதன்படி தன்னுடைய முதல் வாய்ப்பில் தஜிந்தர் சிங் தூர் 19.99 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் ஃபவுல் செய்து ஏமாற்றினார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது வாய்ப்பில் அவர் மீண்டும் ஃபவுல் செய்தார். இதனால் அவர் தன்னுடைய பிரிவில் 12ஆவது இடத்தைப் பிடித்ததுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தார். அவரின் சொந்த சிறப்பான தூரமான 21.49 வீசியிருந்தால் நிச்சயமாக அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்க முடியும்.
Men's Shot put (Group A Qualification) | Tajinderpal Singh Toor:
— India_AllSports (@India_AllSports) August 3, 2021
3rd attempt: No mark
2nd attempt: No mark
1st attempt: 19.99m
👉 Tajinderpal is OUT of contention for Final. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/45DGAyvqZ2
முன்னதாக இன்று காலை மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனு ராணி பங்கேற்றார். இவர் தனது முதல் வாய்ப்பில், 50.35 மீட்டர் வீசினார். இரண்டாவது வாய்ப்பில், 53.19 மீட்டர் வீசினார். மூன்றாவது வாய்ப்பில், 54.04 மீட்டர் வீசினார். போட்டி முடிவில், 14வது இடம் பிடித்து பின் தங்கினார் இந்தியாவின் அனு ராணி. தனது பெஸ்ட் ரெக்கார்டான 63.24 மீட்டர் வீசியிருந்தால், இறுதிச்சுற்றுக்கு அவர் முன்னேறி இருக்கலாம். இதனால், இறுதிச்சுற்றுக்கு செல்லாமல் போட்டியில் இருந்து அனு ராணி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
நேற்று மகளிர் வட்டு எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் பங்கேற்றார். அவர் தன்னுடைய முதல் வாய்ப்பில் அவர் 61.62 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் கவுர் ஃபவுல் செய்தார். மூன்றாவது வாய்ப்பில் கமல்பிரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் வீசி 6ஆவது இடத்திற்கு முன்னேறினார். முதல் மூன்று வாய்ப்புகளுக்கு பிறகு கடைசி 4 இடத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் மீதம் இருந்த 8 வீராங்கனைகள் நான்காவது வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இந்தியா வீராங்கனை கவுர் ஃபவுல் செய்தார். ஐந்தாம் வாய்ப்பில் அவர் 61.37 மீட்டர் தூரம் வீசினார். இறுதியில் ஆறாவது மற்றும் கடைசி வாய்ப்பில் அவர் ஃபவுல் செய்தார். இதனால் 6ஆவது இடம் பிடித்தார். தன்னுடைய சொந்த சிறப்பான தூரம் வீசியிருந்தால் அவருக்கு பதக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛நீ பாதி நான் பாதி’ ஒலிம்பிக் தங்கத்தை பகிர்ந்து கொண்ட இரு நாட்டு வீரர்கள்!