Javad Foroughi | கொரோனா முன்களம் முதல் தங்கம் வரை... ஈரானின் ஒலிம்பிக் தங்கமகன் ஜாவேத் ஃபரூகியின் கதை..!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார் ஈரான் நாட்டைச் சேர்ந்த வீரர் ஜாவேத் ஃபரூகி. 41 வயதாகும் ஜாவேத் ஃபரூகி ஈரானைச் சேர்ந்த செவிலியர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார் ஈரான் நாட்டைச் சேர்ந்த வீரர் ஜாவேத் ஃபரூகி. 41 வயதாகும் ஜாவேத் ஃபரூகி ஈரானைச் சேர்ந்த செவிலியர். ஈரானில் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிக் கொண்டே துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
கொரோனா களத்தில் போராளி; ஒலிம்பிக் களத்தில் வெற்றிக் கனி:
ஜாவேத் இயல்பிலேயே ஒரு போராளி என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு இதயத்தில் சிறு பிரச்சினை இருக்கிறது. ஆகையால் மருத்துவ ரீதியாக அவர் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபடுவதில் ஆபத்தும் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், அவற்றையெல்லாம் மீறி ஜாவேத் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தனது அண்டை நாடான சிரியாவுக்கு, ஈரான் படைகளை அனுப்பிய போது அதன் மருத்துவக் குழுவில் இடம்பெற்று போர்ச் சூழலிலும் பணியாற்றியிருக்கிறார் ஜாவேத். கொரோனா பெருந்தொற்றால் உலகமே இன்றளவும் அச்சத்தில் இருக்கிறது. ஆனால், பெருந்தொற்று முதலில் பரவத் தொடங்கிய போதே, மருத்துவமனையின் ஐசியு-வில் நோயாளிகளுக்கு தயக்கமின்றி சேவை செய்திருக்கிறார். அப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கும் போது மருத்துவமனையின் அடித்தளமே அவருக்கு பயிற்சிக் களமாக இருந்திகிறது. அங்கேயே அவர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். கொரோனா கால சிறப்புப் பணியின் போது ஜாவேதுக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மன உறுதி மிக்க ஜாவேத் இரண்டு முறையும் கொரோனாவிலிருந்து மீண்டார். நோயிலிருந்து மீண்டு வந்த அவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
களம் கண்ட காளை:
எல்லா சவால்களையும் தவிடுபொடியாக்கிய ஜாவேத் ஃபரூகி 10 மீ ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் தங்க வென்றுள்ள ஜாவேத் ஃபரூகி இதெற்கு முன்னதாக குரோஷியா, டெல்லி உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார். டோக்கியோவில் 10மீ ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் சௌரப் சௌத்ரி முதல் இடம் பிடிக்க, ஃபரூகி ஐந்தாவது இடமே பிடித்திருந்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் மிக நேர்த்தியாக தனது திறமையை வெளிப்படுத்தினார். சீன வீரர்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜாம்பவான்கள். அவர்களை எல்லாம் எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் ஃபரூகி. அதுமட்டுமல்ல, 244.8 புள்ளிகளோடு ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
வெற்றிக்குப் பின்னர் பேட்டியளித்த அவர், "மக்கள் அனைவரும் அவரவர் அரசுகள் வழிகாட்டும் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்தால் சீக்கிரமே இந்தத் துயரலிருந்து மீண்டு விடுவோம்" என்று அறிவுரை கூறியிருக்கிறார். ஒரு முன் களப் பணியாளராக அவர் கூறியிருக்கும் இந்த அறிவுரை முக்கியமானதும் கூட.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

