ஐஏஎஸ் டூ பாராலிம்பிக் வெள்ளி: சுஹேஷ் யேத்திராஜின் நம்பிக்கை பயணம் !
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் எஸ்.எல் 4 பிரிவில் இந்தியாவின் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல் 4 பிரிவில் இந்தியாவின் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரியான இவர் இந்தியாவிற்காக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் யார் இந்த சுஹேஷ் யேத்திராஜ்? ஐஏஎஸ் அதிகாரி எப்படி பாரா பேட்மிண்டனில் நுழைந்தார்?
கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் 1983-ஆம் ஆண்டு பிறந்தவர் சுஹாஸ் யெத்திராஜ். இவர் பிறக்கும் போது இவருடைய ஒரு காலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. உடல் அளவில் பாதிப்பு இருந்தாலும் அது அவரின் மனதை பாதிக்கவில்லை. இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரி என்பதால் அவருக்கு நல்ல ஊக்கம் அளித்துள்ளார். இவர் சிறுவயது முதல் நன்றாக படித்து வந்தார். இதனால் அவர் படித்து மருத்துவர் ஆவார் என்று அவருடைய குடும்பம் எதிர்பார்த்தது. ஆனால் அவர் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் வாங்கினார்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி:
அதன் பின்னர் 2004-ஆம் ஆண்டு தன்னுடைய சிறுவயது கனவான மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை துரத்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகினார். 2007ஆம் ஆண்டு இந்தத் தேர்வில் வெற்றி பெற்றார். அத்துடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக தன்னுடைய பணியை தொடங்கினார். முதலில் ஆக்ராவில் தன்னுடைய சார் ஆட்சியர் பணியை தொடங்கினார். அதன்பின்னர் பிராயக்ராஜ் (அலாகாபாத்)மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தார். தற்போது உத்தரப்பிரதேசத்தின் கவுதம்புத்தாநகர் மாவட்டத்தின் ஆட்சியராக அவர் பணிப்புரிந்து வருகிறார்.
பாரா பேட்மிண்டன் பிரவேசம்:
ஐஏஎஸ் தேர்விற்கு படித்து கொண்டிருக்கும் போது இவருக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. குறிப்பாக பேட்மிண்டன் விளையாட்டில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. ஐஏஎஸ் பதவி பெற்ற பிறகு பாரா பேட்மிண்டன் விளையாட்டை தன்னுடைய ஓய்வு நேரத்தில் கற்க தொடங்கினார். பின்னர் 2016ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றார். அப்போது இந்தியா சார்பில் ஒரு சர்வதேச விளையாட்டில் போட்டியில் பங்கேற்ற முதல் ஐஏஎஸ் என்ற சாதனையை படைத்தார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பிரிவில் இவர் தங்கம் வென்றார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் அதே ஆண்டில் ஆசிய பாரா போட்டிகளில் வெண்கலம் வென்றார். தன்னுடைய பேட்மிண்டன் பயிற்சி எப்போதும் ஐஏஎஸ் பணியில் இடையூறு செய்யாமல் அவர் பார்த்து கொண்டார். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும் அவர் சிறப்பான பணியை மேற்கொண்டார்.
2016ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து யாஷ் பாரதி விருதை பெற்றார். அங்கு பல்வேறு மொபைல் செயலிகளையும் அவர் உருவாக்கி அசத்தினார். குறிப்பாக வாக்களார்களுக்கு தேவையான மொபைல் செயலி, குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பாக அறிந்து கொள்ள ஒரு மொபைல் செயலி எனப் பல தொழில்நுட்ப செயலிகளை உருவாக்கினார். அவர் படித்த கணினி அறிவியல் பொறியியல் பட்டம் அதற்கு உறுதுணையாக இருந்தது. கொரோனா பாதிப்பின் போது உத்தரப்பிரதேசத்தில் பணிப்புரிந்த சிறப்பான அதிகாரிகளில் இவரும் ஒருவராக இருந்தார்.
டோக்கியோ பாராலிம்பிக் வெள்ளி:
டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இதேபிரிவில் உலக தரவரிசையில் நம்பர் 2 வீரரான தருண் தில்லான் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தங்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக சிறப்பாக விளையாடிய சுஹேஷ் யேத்திராஜ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார். இறுதி போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான் லூகாஸ் மசூரிடம் 21-15,17-21,15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஒலிம்பிக் அல்லது பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
மேலும் படிக்க:‛போலியோ டூ டோக்கியோ’ உலகம் வியக்கும் இந்தியன்: உலக சாம்பியன் பிரமோத் பக்தின் கதை !