Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக், முடிந்தது இந்தியாவின் பதக்க முயற்சி.. வினேஷ் போகத்திற்கு இன்று வெள்ளி கிடைக்குமா?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்களுக்கான போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன.

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டை, இந்தியா 6 பதக்கங்களுக்கான நிறைவு செய்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் பயணத்தை முடித்த இந்தியா:
கடந்த மாதம் 26ம் தேதி பாரிஸ் நகரில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமான, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இதில் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 76 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த காலிறுதியில் கிர்கிஸ்தானின் முதல் நிலை வீராங்கனையான, ஐபெரி மெடெட் கைஸியிடம் இந்தியாவின் ரீத்திகா ஹூடா தோல்வியடைந்தார். அத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் இந்தியா தனது பதக்கத்திற்கான பயணத்தை முடித்துக்கொண்டது. அதன்படி, ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 6 பதக்கங்களை இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் 2020ல், ஏழு பதக்கங்களை வென்ற நிலையில் இந்த முறை அதைவிட குறைந்த எண்ணிக்கையிலான பதக்கங்களே கிடைத்துள்ளன.
பதக்கம் வென்ற இந்தியர்கள்:
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில். மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (பெண்கள்) மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் சரப்ஜோத் சிங்குடன் வெண்கலம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கத்தையும், ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளியும், ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்தப் பிரிவில் அமன் செஹ்ராவத் வெண்கலமும் வென்றனர்.
- மனு பாக்கர்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் (மகளிர்)
- மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்: 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு
- ஸ்வப்னில் குசலே: 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளில் வெண்கலம்.
- இந்திய ஆண்கள் ஹாக்கி அணி: வெண்கலம்.
- நீரஜ் சோப்ரா: ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளி.
- ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்தப் பிரிவில் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியாவுக்கு ஏழாவது பதக்கம் கிடைக்குமா?
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின், தகுதிநீக்கத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றம் (CAS) ஒத்திவைத்துள்ளது. 50 கிலோ எடைபிரிவில் நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும், 100 கிராம் அதிக எடை இருந்ததால் தங்கப் பதக்கப் போட்டியில் இருந்து வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்தும், கூட்டு-வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது. 3 மணி நேர விசாரணையும் நடந்து முடிந்தது. அதைதொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டின் இறுதித் தீர்ப்பு இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும்.
ஆறு பதக்கங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏழாவது பதக்கத்திற்கான இந்தியாவின் வாய்ப்புகள் CAS இலிருந்து வினேஷ் போகத்தின் சாதகமான தீர்ப்பைப் பொறுத்தது, இது அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்கக்கூடும்.
தேசிய கொடியை ஏந்தும் ஸ்ரீஜேஷ்:
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதில் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரரும், தங்களது தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பில் ஈடுபடுவர். அந்த வகையில் இந்தியா சார்பில், ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான ஸ்ரீஜேஷ் மூவர்ண கொடியை ஏந்தி செல்ல இருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

