![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mirabai Chanu Profile: விறகு சுமந்த மணிப்பூர் பெண்... இந்தியாவின் வெள்ளியை சுமக்கிறார்! வாரே வா... மீராபாய் சானு!
தினமும் 50 கி.மீ., தூரம் ஓடி பயிற்சி எடுப்பது என கடும் பயிற்சியை வழக்கமாக கொண்டவர் மீராபாய் சானு.
![Mirabai Chanu Profile: விறகு சுமந்த மணிப்பூர் பெண்... இந்தியாவின் வெள்ளியை சுமக்கிறார்! வாரே வா... மீராபாய் சானு! India gets first medal Tokyo Olympics 2020 Mirabai Chanu silver medal weight lifting 49kg category know athlete Mirabai Chanu Profile: விறகு சுமந்த மணிப்பூர் பெண்... இந்தியாவின் வெள்ளியை சுமக்கிறார்! வாரே வா... மீராபாய் சானு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/24/b1dc2bb1d48c02c84cb1ca57d7525cc6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். இவர் இந்தப் பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன்மூலம் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். சீனாவின் ஹோ சிஹாய் தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் மீராபாய் சானு யார்? அவர் கடந்து வந்த பாதை என்ன?
தினமும் 50 கிலோ மீட்டர் பயணம்:
மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 1994-ஆம் ஆண்டு பிறந்தவர் மீராபாய் சானு. இவர் தன்னுடைய சிறு வயதில் அதிகமாக விறகு உள்ளிட்டவற்றை தன்னுடைய வீட்டு தேவைக்காக சுமந்து சென்றுள்ளார். அவர் அப்போது செய்த இந்த வேலை பின்நாட்களில் அவருடைய பளுத்தூக்குதலுக்கு உதவியாக இருந்துள்ளது. தன்னுடைய 11 வயதில் முதல் முறையாக உள்ளூர் பளுதூக்குதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின்னர் தேசிய அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று முழு முனைப்புடன் இருந்தார்.
பளுத்தூக்குதல் போட்டியில் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீராங்கனை குஞ்சுராணி தேவியை தன்னுடைய ரோல் மாடலாக கொண்டு பயிற்சி செய்து வந்தார். தன்னுடைய பயிற்சியாளர் அனிதா சானு இடம் பயிற்சி பெறுவதற்காக தன்னுடைய கிராமத்தில் இருந்து தினமும் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்வார். 2011ஆம் ஆண்டு தேசிய ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். அதன்பின்னர் இவருக்கு இந்திய பளுதூக்குதல் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தேசிய பயிற்சியில் அவருடைய ரோல் மாடல் குஞ்சுராணி தேவியிடம் இருந்து பயிற்சியை பெற்றார்.
காமன்வெல்த் வெள்ளி:
2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் இந்தியா சார்பில் பங்கேற்றார். அதில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்போது முதல் முறையாக உலகளவில் 20 வயதான சானு மிகவும் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தன்னுடைய ரோல் மாடலான குஞ்சுராணிதேவியின் சாதனையை முறியடித்து தேர்வானார்.
ரியோ ஒலிம்பிக் சொதப்பல்:
2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சானு தன்னுடைய ஸ்நாட்ச் பிரிவில் 82 கிலோ மட்டும் தூக்கினார். அதன்பின்னர் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் மூன்று முயற்சியிலும் தோல்வி அடைந்தார். இதனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். தன்னுடைய கனவு தொடரில் அதிக தவறுகள் செய்தது அவருக்கு பெரும் வருத்தமாக அமைந்தது.
View this post on Instagram
மீண்டும் எழுந்த சானு:
ரியோ ஒலிம்பிக் தோல்வியை ஒரு தூண்டுகோளாக எடுத்து சானு தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார். 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுத்தூக்குதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். உலக பளு தூக்குதல் போட்டிகளில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை படைத்தார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். அந்த தங்கத்திற்கு பிறகு இவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனால் அந்த ஆண்டு முழுவதும் பளுதூக்குதலில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது. இந்த காயத்தில் மீண்டு வந்த சானு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அதில் 4ஆவது இடம் பிடித்தார். அந்தப் போட்டிகளில் நான்காவது இடம் பிடித்திருந்தாலும் முதல் முறையாக ஸ்நாட்ச் மற்றும் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் சேர்த்து 200 கிலோவிற்கு மேல் முதல் முறையாக தூக்கி அசத்தினார்.
View this post on Instagram
டோக்கியோ ஒலிம்பிக்:
இந்தாண்டு நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையை தூக்கி உலக சாதனை படைத்தார். ஸ்நாட்ச் பிரிவில் 86 கிலோ மட்டுமே தூக்கியதால் இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்த உலக சாதனையின் மூலம் அவருடைய சர்வதேச ரேங்கிங் முன்னேற்றும் கண்டது. இதன் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற போட்டியிலும் வழக்கம் போல் ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோ மட்டுமே தூக்கினார். அதன் காரணமாக தான் அவருக்கு தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறி போனது. எனினும் 2000ஆம் ஆண்டு கர்ணம் மல்லேஸ்வரி பெற்ற வெண்கலப்பதக்கத்திற்கு பிறகு இவர் தான் வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளார். கிட்டதட்ட 21 ஆண்டுகளுக்கு சானு இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேலும் படிக்க: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டிக்கு சவுரப் சௌதரி தகுதி !
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)