ஊரே கூடி எதுக்கு படிப்பு, விளையாட்டுன்னு கேட்டாங்க, பாட்டிதான் எங்களுக்காக நின்னாங்க - ரேவதி வீரமணி
தனது வெற்றிக்கதையை ரேவதி முன்வைத்துள்ளார். வெள்ளந்தியாகப் பேசும் அவர் வார்த்தைகளில் வெற்றியின் வாசம் வீசுகிறது.
மதுரையின் ஒரு குக்கிராமத்திலிருந்து இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் டோக்கியோவில் ஓடவிருக்கிறார் ரேவதி வீரமணி. டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலப்புத் தொடர் ஓட்டம் பிரிவில் இந்தியா சார்பாகக் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளார். அவர் அங்கே சர்வதேச வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்று கோடானுகோடி மக்கள் வாழ்த்துகளையும் ஆசிக்களையும் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தனது வெற்றிக்கதையை ரேவதி முன்வைத்துள்ளார். வெள்ளந்தியாகப் பேசும் அவர் வார்த்தைகளில் வெற்றியின் வாசம் வீசுகிறது.
அவருடைய பேட்டியிலிருந்து...
"நான் பிறந்தது மதுரை பக்கத்துல உள்ள சக்கிமங்கலம் கிராமத்துல. எனக்கு 6 வயசு இருக்கும்போதே அப்பா, அம்மா இறந்துட்டாங்க. அப்ப இருந்தே பாட்டிதான் என்னையும் என் தங்கச்சியையும் கஷ்டப்பட்டு வளத்தாங்க. ஊரே கூடி பொம்பளப் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கிற, ரெண்டுல ஒன்ன யார்கிட்டாயது வளக்கக் கொடுத்துடு என்று சொன்னாங்க. ஆனா எங்க பாட்டி எந்த சூழல்லையும் எங்கள விட்டுத்தரல. நான் அரசுப் பள்ளிக்கூடத்துல சேர்ந்தேன். ஸ்கூல் படிக்கும்போது சின்ன சின்ன ஓட்டப்பந்தய போட்டில கலந்துக்குவேன்.
ஆனா, அப்பெல்லாம் இதுமாதிரி பெரிய கனவு இல்ல. 12வது படிக்குறப்ப ஒரு தடவ மாவட்ட அளவிலான போட்டில கலந்துகிட்டு பள்ளிக்கூடத்துக்கு பரிசு வாங்குனேன். அப்ப அங்கிருந்த கண்ணன் சார் (ரேவதியின் பயிற்சியாளர்) என்னைப் பார்த்தார். அவர்தான் என்கிட்ட நீ வந்து இங்க சேர்ந்துக்கோ. டெய்லி ரேஸ்கோர்ஸ் வா. நான் ஷூ வாங்கித் தரேன் நீ ஓட்டப்பந்தயத்துல மட்டும் கவனமா இருன்னு சொன்னார். அப்ப நான் அவர்கிட்ட இல்ல சார் டெய்லி சக்கிமங்கலத்துல இருந்து வந்தபோக 40 ரூவா ஆகும். அதுக்கு வசதியில்லேன்னு சொன்னேன்.
அப்பவும் அவர் விடல. சரி நான் காலேஜூல ஃப்ரீயா சீட் வாங்கித் தருவேன்னு சொன்னார். சரின்னு சொன்னேன். பாட்டியும் சரின்னு சொல்லிடுச்சு. மதுரை லேடி டோக் காலேஜ்ல படிச்சுக்கிட்டே தினமும் பயிற்சிக்குப் போவேன். நிறைய போட்டிகளில் கலந்துக்குட்டேன். அப்புறம் பாட்டியாலாவில் உள்ள இந்தியன் கேம்பில் இருந்து ஃபோன் வந்துச்சு. இங்கே வந்து பயிற்சி எடுத்துக்கோன்னு சொன்னாங்க. அதுக்கும் பாட்டி ஓகே சொன்னாங்க. பாட்டிக்குத்தான் எல்லா பெருமையும் சேரணும். பாட்டிக்கு டிஸ்ட்ரிக், ஜோனல், ஸ்டேட், நேஷனல், வேர்ல்டுன்னு எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனா நான் ஜெயிச்சா சந்தோஷமா இருப்பாங்க. 2019ல் தோஹாவில் நடந்த போட்டியில் ரிலே ரேஸில் இந்திய அணி 4வது இடம் பெற்றது. நானும் அதிலிருந்தேன். சின்ன வயசில் எங்க கண்ணன் சார் சொல்லி நான் ஒலிம்பிக் போவேன்னு பேட்டி கொடுத்திருக்கேன்.
ஆனா இன்னிக்கு அது நெசமாயிடுச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாட்டி, கண்ணன் சார், நான் கிரவுண்டில் பயிற்சி செய்யறத பார்த்து டிஷர்ட், ஷூ வாங்கிக் கொடுத்தவங்க, எனக்கு விமான டிக்கெட்லாம் போட்டுக்கொடுத்த ஏடிஎஸ்பி வனிதா மேம்னு எல்லோருக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன். அத்தன பேரும் சேர்ந்துதான் என்ன வெற்றி பெற வச்சுருக்காங்க.
எங்க ஊர்ல ஏன் பொம்பளப் புளைங்கள டவுசர் சட்ட மாட்டி ஓடவிடுறன்னு பாட்டியை திட்டுனவுங்க எல்லாம் இன்னிக்கு பாராட்டுறாங்க. எனக்கு ரயில்வேயில் டிசியா வேல கிடைச்சிருக்கு. அங்கேயும் நீ விளையாட்டப் பாரு நாங்க சம்பளம் கொடுத்துருவோம்னு கொடுத்திருக்காங்க. இன்னிக்கு நான் ஒலிம்பிக்ல இந்தியாவுக்காக ஓடப் போறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன். மொதமொதல் இந்தியா டிஷர்ட் போட்டப் பெருமையா இருந்துச்சு. கனவு மாதிரி இருந்துச்சு. இப்ப மொதமொதல் ஒலிம்பிக்ல ஒலிம்பியனா இந்தியாவுக்காக ஓடப் போறேன். இன்னும் சந்தோஷமா இருக்கு" என்று மதுரைத் தமிழ் மணக்க பேசினார் ரேவதி.