Akeal Hosein: CSK ஏலத்தில் எடுத்த அகில் ஹுசைன்! யார் இந்த சுழல் புயல்?
ஐபிஎல் மினி ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹுசைனை சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் இன்று அபுதாபியில் நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி சென்னை அணியாகும். கான்வே, ரவீந்திரா, பதிரானா, ஜடேஜா என முன்னணி வீரர்களை அணியில் இருந்து நீக்கிய சென்னை அணி யாரை ஏலத்தில் எடுக்கப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது.
சிஎஸ்கே-வில் அகில் ஹுசைன்:
ரூபாய் 43.60 கோடி கையிருப்பு தொகையுடன் ஏலத்தில் குதித்த சென்னை அணி இந்த ஏலத்தில் முதல் நபராக வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த அகில் ஹுசைனை ஏலத்தில் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இவரை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான இவர் சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
யார் இவர்?
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காக இவர் ஒரு போட்டியில் ஆடி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக்கொடுத்தார். பேட்டிங்கிலும் அசத்தக்கூடிய இவர் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 309 ரன்கள் எடுத்துள்ளார். 87 ஒருநாள் போட்டிகளில் ஆடி 293 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் விளாசியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளராக தற்போது களமிறங்கி வரும் இவர் டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 83 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவர் டெயிலண்டராக பேட்டிங்கில் வருவார் என்று கருதப்படுகிறது. சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் சுழலில் இவரது பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதி சென்னை அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
தவறவிட்ட வீரர்கள்:
கேமரூன் கிரீனுக்காக கொல்கத்தா அணியுடன் போட்டாபோட்டி நடத்தியது. ஆல்ரவுண்டரான அவருக்காக ரூபாய் 25 கோடி வரை சென்ற சென்னை அணி அவரை 20 லட்சத்தில் தவறவிட்டது. அதேபோல, இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோயை ஏலத்தில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டியது.
ராஜஸ்தான் அணியுடன் போட்டியிட்ட போதும், அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் வசம் கொண்டு சென்றது. ருதுராஜ், தோனி, சாம்சன், ஷிவம் துபே, கலீல் அகமது ஆகிய வீரர்கள் மட்டுமே உள்ள நிலையில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே உள்ள நிலையில் மற்ற வீரர்களுக்காக வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டி வருகிறது.
யாரை எடுக்கப்போகிறது?
சென்னை அணி கைவசம் தற்போது ரூபாய் 41 கோடி உள்ள நிலையில் அவர்கள் அடுத்தடுத்து ஏலத்திற்கு வரும் வீரர்களில் முக்கியமான வீரர்களை தங்கள் வசம் கொண்டு வர ஆர்வம் காட்டுவார்கள் என்று கருதப்படுகிறது.




















