Gavaskar On Dhoni: ”சாகுறதுக்கு முன்னாடி.." தோனி ஆட்டோகிராஃப் சட்டையில ஏன் வாங்குன தெரியுமா? - கவாஸ்கர் நெகிழ்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் இருந்து தனது சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கியது ஏன்? என்பதை சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் இருந்து தனது சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கியது ஏன் என்பதை சுனில் கவாஸ்கர் விளக்கியுள்ளார். அதோடு, கிரிக்கெட் உலகில் தனக்கு மிகவும் பிடித்த இரண்டு தருணங்களையும் தெரிவித்துள்ளார்.
தோனி கொடுத்த பரிசு:
நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக தோனியின் பல்வேறு செயல்களும் உள்ளன. இந்த சூழலில் நடப்பு தொடரில் சென்னை அணியின் கடைசி லீக் போட்டி, கொல்கத்தா அணிக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்தது. அந்த போட்டியின் முடிவில் ரசிகர்களுக்கு தனது கையொப்பமிட்ட பந்து, டிஷர்ட் மற்றும் தொப்பி போன்றவற்றை தோனி பரிசாக வழங்கினார். சென்னை அணியினர் மைதானம் முழுவதும் ஊர்வலமாக வந்து, இந்த பரிசை ரசிகர்களுக்கு கொடுத்தனர்.
ஆட்டோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்:
அப்போது, இந்த போட்டியின் வர்ணனையாளர்களில் ஒருவரான, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர், தோனியிடம் வந்து தனது சட்டையில் ஆட்டோகிராஃப் போடும்படி கேட்டுக்கொண்டார். அதையேற்று கவாஸ்கரின் மார்பு பகுதியில் சட்டையின் மீது தனது கையொப்பமிட்டு, அவரை அணைத்துக்கொண்டார் தோனி. இந்த நெகிழ்ச்சியான காட்சி இணையத்தில் பரவி வைரலானது.
சட்டையில் ஆட்டோகிராஃப் ஏன்?
இந்த நிலையில் தோனியிடம் இருந்து சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கியது ஏன் என்பது குறித்து கவாஸ்கர் விளக்கமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பேசிய அவர் “தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகம், சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களை கவுரவிக்க உள்ளதை அறிந்ததும் ஒரு சிறப்பான நினைவை ஏற்படுத்த விரும்பினேன். அதற்காக தோனியை நோக்கி ஓடிச்சென்று சட்டையில் அவரது ஆட்டோகிராஃப் வாங்கினேன். உள்ளூர் மைதானமான சேப்பாகத்தில் இது அவருக்கு கடைசி போட்டி.
ஆமாம், ஒரு வேளை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால், மீண்டும் இங்கு விளையாட வாய்ப்புள்ளது. இதனால், கடைசி லீக் போட்டி தினத்தில் அந்த தருணத்தை சிறப்பாக்க முடிவு செய்தேன். கேமரா யூனிட்டில் யாரோ ஒருவர் மார்க்கர் பேனா வைத்திருந்தது எனது அதிர்ஷ்டம். அதை எனக்கு கொடுத்து உதவிய அந்த நபருக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். தோனி எனக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என உணர்ச்சிவசப்பட்டர்.
சாகும் முன்பு..
இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனி பெரும்பங்காற்றியுள்ளார். தனது வாழ்நாளிலேயே இரண்டு சிறப்பான கிரிக்கெட் தருணங்கள் என்றால் அது, 1983ம் ஆண்டு கபில் தேவ் உலகக்கோப்பையை தனது கையில் ஏந்தியதையும், 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்காக தோனி அடித்த சிக்சரையும் தான் கூறுவேன். நான் இறப்பதற்கு முன்பாக பார்க்க வேண்டும் என விரும்பும் கிரிக்கெட் தருணங்களும் அது தான்” என கவாஸ்கர் பேசினார்.