எங்கு விட்டோமோ அங்கிருந்தே தொடங்குவோம் - ஐபிஎல் குறித்து விராட் கோலி பேட்டி
விராட் கோலி இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், ஐ.பி.எல்.இல் அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல். 2021 ஆம் ஆண்டுக்கான சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவில்லை. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் விளையாடிவிட்டது. டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக எஞ்சியுள்ள ஐ.பி.எல். போட்டிகளை நடத்தி முடிக்க திட்டமிட்ட பிசிசிஐ அவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.
இந்த நிலையில் 4 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐ.பி.எல் தொடர் தொடங்க இருக்கிறது. துபாயில் நடைபெறும் போட்டியில் எலியும் பூனையுமாக கருதப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து நேரடியாக துபாய் சென்ற இந்திய அணி வீரர்கள் 6 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். இந்த 2 ஆம் பாதி ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியின் நீல நிற சீருடை அணிந்து விளையாட இருக்கிறது. இதனை அறிமுகம் செய்துவைத்து பேசிய கேப்டன் விராட் கோலி, “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முதல் பாதியில் விளையாடிய ஆதம் ஜாம்பா, ரிச்சர்ட்சன் ஆகியோர் இரண்டாம் பாதியில் விளையாடாததற்கான காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கது. இலங்கை வீரர்களான ஹசரன்கா, சமீராவின் வருகை பெங்களூருக்கு அணிக்கு நிச்சயம் பயனளிக்கும்.” என்றார்.
இந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பான தொடக்கத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அளித்திருப்பதாக கூறிய விராட் கோலி, “முதல் பகுதியில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை இதில் தொடர்வோம்.” என தெரிவித்தார். ”தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றிபெற்றாலும், 8 வது போட்டியை அதே கவனத்தோடு விளையாட வேண்டும். 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்தால், நாம் நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியே வந்தவுடன் எனக்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபடுகிறோம்.” என்றார்.
தற்போதைய ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் டெல்லி, சென்னைக்கு அடுத்தபடியாக ராயல்சேலஞ்சர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 2 தோல்வியுடன் 3 வது இடத்தில் உள்ளது. தற்போது விராட் கோலி இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், இதில் அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.