IPL 2024 CSK: கெத்து காட்டும் சென்னை அணிக்கு ஷாக்! பாதியில் செல்லும் வேகப்புயல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
IPL 2024 CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர் பாதியில் இருந்து விடைபெறுகிறார்.
17வது ஐ.பி.எல். சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அனைத்து அணிகளும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருப்பதற்கு தீவிரமான முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். களமிறங்கியுள்ள 10 அணிகளில் அதிக கவனம் பெறும் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றியைப் பெற்று ஒரு போட்டியில் தோல்வியினைச் சந்தித்துள்ளது.
வெளியேறும் முஸ்தபிசூர் ரஹ்மான்
ஐ.பி.எல். தொடரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணிகளில் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் பெற்று இருக்கும். இப்படியான நிலையில் சென்னை அணி இந்த முறை அதிகப்படியான இளம் வீரர்களைக் கொண்டு களம் கண்டு வருகின்றது. ருதுராஜ் கேப்டன்ஷியில் சென்னை அணியின் பந்து வீச்சு பலம் என்பது இந்த ஆண்டு வேகப்பந்து வீச்சாக உள்ளது. சென்னை அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களம் காண்கின்றது.
சென்னை அணியின் மிகவும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் என்றால் அதில் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசூர் ரஹ்மான் தான். இவர் இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள முதல் மூன்று போட்டிகளில் விளையாடி சென்னை அணிக்கு தீவிரமான பங்களிப்பை அளித்து வருகின்றார். மூன்று போட்டிகளில் விளையாடி 12 ஓவர்கள் வீசி 106 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஊதா நிறத் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
இப்படியான நிலையில் சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முஸ்தபிசூர் ரஹ்மான் ஏப்ரல் மாதம் இறுதி வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்றும், அதன் பின்னர் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் விளையாட செல்லவுள்ளார் என கூறப்படுகின்றது.
சென்னைக்கு உள்ள போட்டிகள்
ஏப்ரல் மாதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ள மிகவும் முக்கியமான நான்கு போட்டிகள் உள்ளது. குறிப்பாக நாளை மற்றும் ஏப்ரல் 28ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான போட்டியில் சென்னை விளையாடவுள்ளது. ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடவுள்ளது. அதேபோல் ஏப்ரல் 19 மற்றும் 23ஆம் தேதிகளில் லக்னோவுக்கு எதிராக சென்னை விளையாடவுள்ளது.
எனவே மே மாதங்களில் சென்னை அணி களமிறங்கும் போட்டிகளில் சென்னை அணியின் பந்து வீச்சில் என்னமாதிரியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, ப்ளேஆஃப் சுற்றினை எவ்வாறு உறுதி செய்யும் என்ற கேள்வி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மனதில் தோன்றியுள்ளது.