KKR vs MI: கொல்கத்தா - மும்பை..மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்!
கொல்கத்தா மற்றும் மும்பை அணி இன்று விளையாட இருந்த போட்டியில் மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 59 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன.
இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று, தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை இறுதி செய்ய அந்த அணிகள் தீவிரம் காட்டுகின்றன. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
மும்பை - கொல்கத்தா:
கொல்கத்தா அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். மும்பை அணியோ 12 போட்டிகளில் நான்கில் மட்டும் வென்று பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இருப்பினும் நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு, கொல்கத்தாவை பழிவாங்க மும்பை அணி முனைப்பு காட்டுகிறது. இதனை தகர்த்து, நடப்பு தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 210 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 67 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மழையால் தாமதம்:
Rain at the Eden Gardens. 🌧️pic.twitter.com/7L8ZdNM0wV
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 11, 2024
இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய போட்டி மழையால் ரத்து ஆனால் ஒரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.