இது சரியா, தவறா.? முழு பிஸினஸாக மாறும் ஐபிஎல்.. என்ன சொல்லப்போகிறது எதிர்காலம்?
சமீப காலங்களில் ஐபிஎல் தொடர் அதிகமாக வர்த்தக நோக்கத்தை சார்ந்த பயணம் செய்ய தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு புது அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் அணியை ஏலத்தில் எடுத்த தொகைகள் வெளியாகின. அதன்படி ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும், சிவிசி நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் எடுத்துள்ளனர்.
இதன் மூலம் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளது. இந்தச் சூழலில் சமீப காலங்களில் ஐபிஎல் தொடர் அதிகமாக வர்த்தக நோக்கத்தை சார்ந்த பயணம் செய்ய தொடங்கியுள்ளது. இதில் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போது மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்கள் போல் தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் தொடரின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள உள்ளூர் திறமை வெளியே கொண்டு வர ஒரு பாலமாக அமையும் என்று கருதப்பட்டது. மேலும் உள்ளூர் வீரர்கள் வெளிநாட்டு வீரர்களுடன் சேர்ந்து விளையாடும் போது ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதன்படியே ஐபிஎல் தொடர் மூலம் பும்ரா,நடராஜன், ஹர்திக் பாண்ட்யா,யூசஃப் பதான்,வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.
அதேபோல் ஐபிஎல் தொடரின் மூலம் பல உள்ளூர் வீரர்கள் மேலே வர ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இருப்பினும் ஐபிஎல் தொடர் வர்த்தக நோக்கத்தை சார்ந்தே அதிகம் இருந்தது என்பது தற்போது வரை நடந்துள்ள தொடர்களின் மூலம் தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் இதுவரை நடந்துள்ள 14 ஐபிஎல் தொடர்களில் மும்பை,சென்னை,கொல்கத்தா,சன்ரைசர்ஸ்,ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்தந்த அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் செய்யும் நல்ல வீரர்கள் மீது செய்யும் முதலீடுகளும் அந்த அணிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் ஐபிஎல் தொடர் வர்த்தக அளவிற்கு எந்தளவிற்கு சென்றுள்ளது என்பதை அந்தந்த அணிகளின் சமூக வலைதள பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது ஒவ்வொரு அணியும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களை நிர்வாகிக்க ஒரு தனி குழுவை அமைத்துள்ளனர். அத்துடன் அவை அவர்களுக்கு எந்த விஷயத்தை எப்படி சமூக வலைதளத்தில் பணமாக மாற்றுவது என்பதையும் சிறப்பாக கூறி வருகின்றனர். அதன்விளைவாக பல்வேறு அணிகள் ஒரு பிராண்டாஷிப் ஆக மாறி வருகின்றன. அதேசமயம் இதன்மூலம் தங்களுடைய வருவாயை பெருக்கி வருகின்றனர். ஸ்பான்ஷர்சிப் உள்ளிட்ட பிற விஷயங்களும் ஐபிஎல் தொடர் வளர வளர அதிகரித்துள்ளது காணப்படுகிறது. அதுவும் இந்தத் தொடரை மேலும் வர்த்தகம் நோக்கி செல்ல வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரிலுள்ள அணிகளின் மதிப்பு உயர்வும் இந்தத் தொடர் வர்த்தக ரீதியில் எவ்வளவு நகர்ந்துள்ளது என்பதற்கு பெரிய சான்று. ஏனென்றால் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்ட போது மொத்த அணிகளின் மதிப்பு சேர்த்து சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் தான் இருக்கும். ஆனால் நேற்று எடுக்கப்பட்ட லக்னோ அணி 7,090 கோடி ரூபாய் மற்றும் அகமதாபாத் அணி 5,262 கோடி ரூபாய் ஆகிய இரண்டும் இந்த 8 அணிகளின் மொத்த மதிப்பைவிட மிகவும் அதிகமான ஒன்று. இந்த அளவிற்கு ஐபிஎல் தொடர் வர்த்தக ரீதியில் பெரிய ஹிட் அடித்துள்ளது.
ஐபிஎல் தொடர் வர்த்தக ரீதியில் சென்றதனால் இதை வைத்தும் பல விஷயங்கள் வர்த்தக ரீதியில் ஹிட் அடித்துள்ளன. உதாரணமாக ஐபிஎல் தொடரின் போது போடப்படும் விளம்பரங்கள் சர்வதேச மற்றும் ஐசிசி தொடர்களுக்கு கிடைக்கும் வருவாய் அல்லது அதற்கு மேலும் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் ஐசிசி தொடர்களுக்கு நிகரான சூதாட்டம் ஐபிஎல் தொடருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. வர்த்தக ரீதியில் ஐபிஎல் தொடர் சென்ற பிறகு அதன் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்காக வீரர்களும் தங்களுடைய முழு அர்பணிப்பை தருகிறனர். ஒரு சில சமயங்களில் பலர் தங்களுடைய தேசிய அணிகளுக்கு இணையாக ஐபிஎல் அணிகளுக்கு முக்கியதுவம் தருகின்றனர் என்ற குற்றச்சாட்டை பலர் முன்வைக்கின்றனர்.
ஐபிஎல் தொடர் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கடந்த முறை மற்றும் இம்முறை யுஏஇயில் தொடர் நடத்தப்பட்டத்தை வைத்து புரிந்து கொள்ளலாம். கொரோனா பாதிப்பு காலத்திலும் ஐபிஎல் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பிய போது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்படாமல் யுஏஇயில் நடத்தப்பட்டது. அதை ஒரு சிலர் வரவேற்ற நிலையில் மற்ற சிலர் விமர்சித்தனர். மேலும் டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்பு வரை ஐபிஎல் தொடர் நடைபெற்றது. இதனால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இந்தத் தொடருக்கு தயாராக நேரம் குறைவானதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் தற்போது 10 அணிகள் என்றால் தற்போது விளையாடப்படும் விதியில் ஐபிஎல் தொடர் நடந்தால் மொத்தம் 94 போட்டிகள் நடைபெற வேண்டும். அதற்கு எப்படியும் குறைந்தது 70 நாட்கள் தேவைப்படும். இது ஐசிசியின் சர்வதேச போட்டிகளின் அட்டவணையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் வீரர்களுக்கு பெரிய பணிச் சுமையாக அமையும். சரியான ஓய்வும் வீரர்களுக்கு இருக்காது. எனவே இது குறித்து பரிசீலிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆனால் எப்படி இருந்தாலும் மற்ற உள்ளூர் நாட்டு தொடர்களைவிட ஐபிஎல் தொடரில் எப்போதும் வர்த்தக ரீதியில் ஹிட் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக கவுண்டி டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தையும் 14 சீசன் கொண்ட ஐபிஎல் தொடர் தன்னுடைய முதல் சீசனிலிருந்தே முந்தி இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆகவே வர்த்தக ரீதியில் ஒரு தொடர் செல்வது நல்லது தான் என்றாலும் அது இந்த தொடர் தொடங்கப்பட்டதற்கான நோக்கத்தைவிட வர்த்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவது தான் சிக்கல் என்று பல வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: IPL 2022: ’காசு... பணம்... துட்டு..’ இரு ஐபிஎல் அணிகளை ஏலத்தில் எடுத்த ‛பாட்ஷாக்கள்’ யார்?