IPL 2025 MI vs SRH: மும்பையில் உதிக்காத சன்ரைசர்ஸ்.. பல்தான்ஸ்க்கு 3வது வெற்றி.. சன்ரைசர்ஸக்கு 5வது தோல்வி
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய செய்த சன்ரைசர்ஸ் அபிஷேக் சர்மா, கிளாசென், அனிகெத் ஆகியோரின் பேட்டிங்கால் 162 ரன்களை எட்டியது.
ரோகித் அதிரடி தொடக்கம்:
இதையடுத்து, 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணிக்கு ரோகித் - ரிக்கெல்டன் அதிரடி தொடக்கம் தந்தனர். ரோகித் சர்மா சிக்ஸர்களாக விளாசினார். இதனால், ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சென்றது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மாவை கம்மின்ஸ் அவுட்டாக்கினார். அவரது பந்தில் 16 பந்துகளில் 3 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
வில் ஜேக்ஸ் - சூர்யா கலக்கல்:
மறுமுனையில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ரிக்கெல்டனை ஹர்ஷல் படேல் காலி செய்தார். அவரது பந்தில் 23 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட்டாக, அடுத்து சூர்யகுமார் - வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.
இருவரும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசியதால் ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட் குறையவில்லை. மும்பை அணியும் எளிதாக 100 ரன்களை கடந்தது. ஆட்டம் மும்பையின் வசம் வந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். அவர் 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
முடித்து வைத்த பாண்ட்யா:
திலக் வர்மா - வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தனர். ஆனால், வில் ஜேக்ஸ் 26 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். பின்னர், கேப்டன் பாண்ட்யா களமிறங்கினார். அவர் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு பவுண்டரிகளாக விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய 17வது ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடுத்தடுத்து விளாசி ஆட்டத்தை முழுவதும் மும்பை பக்கம் கொண்டு வந்தார்.
வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். அவர் சிக்ஸருக்கு முயற்சித்த பந்தை இஷான் கிஷண் கேட்ச் பிடித்தார். அவர் 9 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாண்ட்யா அவுட்டான பிறகு வந்த நமன்தீர் டக் அவுட்டானார்.
கைவசம் விக்கெட்டுகள் இருந்ததாலும் 1 ரன் மட்டுமே தேவை என்பதாலும் மும்பை வெற்றியை சன்ரைசர்சால் தவிர்க்க முடியவில்லை. கடைசியில் மும்பை அணி 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 17 பந்துகளில் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.ஆனாலும், 18வது ஓவரை 2 விக்கெட் வீழ்த்தி கட்டுக்கோப்பான ஈசன் மலிங்கா வீசினார். ஜீசன் அன்சாரி, ஹர்ஷல் படேல் 3 ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கியிருந்தனர். மும்பை அணிக்கு இது 3வது வெற்றியாகும். சன்ரைசர்ஸ் அணிக்கு இது 5வது தோல்வி ஆகும்.