IPL 2025 MI vs LSG: பட்டாசாய் வெடிப்பார்களா பாண்ட்யா பாய்ஸ்? பந்துவீச்சில் கலக்குவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 LSG vs MI: வான்கடேவில் நடக்கும் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக லக்னோ அணி முதலில் பந்துவீசுகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள லக்னோ அணியும் இன்று மோதுவதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதலாம்.
பந்துவீசும் லக்னோ:
வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இனி நடக்கும் ஒவ்வொரு போட்டியுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியாக மாறியுள்ளது. தொடர் தோல்விகளுக்கு பிறகு கம்பீரமாக வெற்றி நடைபோடும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முனைப்பு காட்டும். அதேபோல லக்னோ அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முன்னேறலாம்.
பேட்டிங் பலம்:
மும்பை அணியைப் பொறுத்தவரை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய பலமாக மாறியுள்ளார். அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது. ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ்அதிரடி காட்டினால் அவர்களுக்கு இன்னும் பலமாகும். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் பலமாக உள்ளனர்.
லக்னோ அணிக்கு மார்க்ரம், மார்ஷ் இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து தருவது அவசியம் ஆகும். மிடில் ஆர்டரில் பூரண் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினால் லக்னோ அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அப்துல் சமத், டேவில் மில்லர் மிடில் ஆர்டரில் அசத்த வேண்டியது அவசியம். லக்னோ அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருப்பது கேப்டன் ரிஷப் பண்ட்டின் ஃபார்மே ஆகும். அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினால் மும்பைக்கு நிச்சயம் அவஸ்தை ஏற்படும்.
பந்துவீச்சு பலம்:
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மும்பை அணியில் போல்ட், தீபக் சாஹர், பும்ரா வேகத்தில் கலக்க காத்துள்ளனர். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக பந்துவீச்சிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். சுழலைப் பொறுத்தவரையில் சான்ட்னர், விக்னேஷ் புத்தூர் நம்பிக்கையாக உள்ளனர்.
லக்னோ அணிக்கு வேகத்தில் ஆவேஷ்கான், ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர் உள்ளனர். இவர்கள் சிறப்பாக வீசினால் மட்டுமே மும்பையை கட்டுப்படுத்த முடியும். சுழலில் திக்வேஷ் லக்னோவிற்கு பக்கபலமாக உள்ளார்.
புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக காணப்படும் என்பது உறுதியாகும்.




















