(Source: Poll of Polls)
IPL 2025 MI vs LSG: கவலை தரும் ரிஷப் பண்ட் கம்பேக் தருவாரா? மும்பையை மிரள வைப்பாரா?
IPL 2025 MI vs LSG: லக்னோ அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் இன்று மீண்டும் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

IPL 2025 MI vs LSG: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னணி அணிகள் வெற்றி, தோல்வி என்று மாறி, மாறி சந்தித்து வருகின்றன. இதனால், இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியுள்ளது. பெரும்பாலான அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துவிட்ட நிலையில், ரிஷப்பண்ட் தலைமையில் களமிறங்கியுள்ள லக்னோ அணி ஒரு வெற்றி பெற்றாலும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறது.
கவலை தரும் ரிஷப்பண்ட்:
இந்த நிலையில், அந்த அணி இன்று தங்களது சொந்த மைதானத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேருக்கு நேர் மோதுகின்றது. மும்பை அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் தோற்றாலும் கடந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது.
லக்னோ அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரிஷப்பண்ட்டின் ஃபார்ம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. லக்னோ அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் சேர்த்து அவர் 0, 15, 2 ரன்கள் என மொத்தமே 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் மிக அதிக தொலைக்கு ஏலம் போனவர் ரிஷப்பண்ட். மொத்தம் ரூபாய் 27 கோடி கொடுத்து அவரை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.
ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் ஜாம்பவான்கள்:
லக்னோ அணியைப் பொறுத்தவரை ரிஷப்பண்ட், மார்க்ரம், மார்ஷ், பூரண், பதோனி, மில்லர், சமத் என பேட்டிங் பட்டாளம் நிறைந்திருந்தாலும் பூரண் தவிர யாரிடமுமே நிலையான ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைந்துள்ள லக்னோ அணி கண்டிப்பாக மீண்டும் ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே லக்னோ அணியால் இந்த தொடருக்குள் திரும்ப முடியும்.
அதேசமயம், ஷர்துல் தாக்கூர், பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த், பிரின்ஸ் யாதவ், ஷமர் ஜோசப் என நல்ல பந்துவீச்சு பட்டாளத்தை கொண்ட லக்னோ அணி தங்களது பந்துவீச்சாளர்களை திறம்பட கையாள வேண்டியது அவசியம் ஆகும்.
மும்பையை சமாளிக்குமா?
மும்பை அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா, ரிக்கெல்டன், பாணட்யா, வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என பெரிய பேட்டிங் பட்டாளம் உள்ளனர். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஃபார்ம் மட்டுமே கவலைக்குரியதாக உள்ளது. அவர் ஃபார்முக்கு திரும்பிவிட்டால் எதிரணி அவரை கட்டுப்படுத்துவது அசாத்தியம் ஆகிவிடும்.
அணியாக பார்க்கும்போது லக்னோவை காட்டிலும் மும்பை அணி பலமானதாக உள்ளது. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இன்று ரிஷப்பண்ட் களமிறங்குகிறார். அவர் கட்டாயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
அவர் நிலையான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது லக்னோ அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமையும்.




















