IPL: அடேங்கப்பா! ஐ.பி.எல்.லில் இனி ஒவ்வொரு சீசனிலும் இத்தனை மேட்சா? ஜெய்ஷா பரபரப்பு பேட்டி
2025ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் 84 ஆக அதிகரிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் டி20 கிரிக்கெட் போட்டிகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றதில் ஐ.பி.எல். மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஐ.பி.எல். தொடருக்கு என்று இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் தொடர் என்பதால் உலகின் மற்ற கிரிக்கெட் லீக் தொடர்களை காட்டிலும் ஐ.பி.எல். தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களும், ஆயிரக்கணக்கான கோடிகளில் வர்த்தகமும் உண்டு.
ஐ.பி.எல். போட்டிகள் அதிகரிப்பா?
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா ஆக்ஷன், வீரர்கள் தக்க வைப்பு, வீரர்கள் பரிமாற்றம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஐ.பி.எல். நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அடுத்தாண்டிற்கான அதாவது 2025ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் முதல் 84 போட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஐ.பி.எல்.லில் 74 போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு முதல் இந்த போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷா விளக்கம்:
இதுதொடர்பாக, விளக்கம் அளித்துள்ள பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, இதுவரை ஏதும் உறுதி செய்யப்படவில்லை. வீரர்களுக்கான பணிச்சுமை, அவர்களின் கால அட்டவணை ஆகியவை குறித்தும் பரிசீலிக்க வேண்டியுளளது என்று கூறினார். ஐ.பி.எல். தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்றபோது இருந்த ஆட்டங்கள், குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பங்கேற்ற பிறகு போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
ஐ.பி.எல். போட்டிகள் மேலும் அதிகரித்தால் சர்வதேச கிரிக்கெட் அட்டவணை, வீரர்களுக்கான பணிச்சுமை, வீரர்கள் மனரீதியான தாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வீரர்கள் ஏலம் நடத்துவதில் ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொரு வித கருத்து கூறுவது குறித்தும் ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, நாங்கள் அனைத்து அணிகளின் கருத்துக்களையும் கேட்கிறோம்.
வீரர்கள் ஏலம்:
பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களும், குறைவான நபர்கள் கூறும் கருத்துக்களும் எங்களுக்கு முக்கியம். பி.சி.சி.ஐ. எடுக்கும் முடிவு இறுதியானது. சிறப்பான அணியை கொண்டவர்கள் மெகா ஏலம் வேண்டாம் என்கிறார்கள், தங்கள் அணி சிறப்பாக இல்லை என்று கருதுபவர்கள் ஏலம் வேண்டும் என்கிறார்கள். வீரர்கள் கலவையாக இருப்பது, அணியின் வளர்ச்சி மிகவும் முக்கியம் ஆகும் என்றார்.
மேலும், ஏலத்தில் அதிக வீராங்கனைகள் பங்கேற்பதைப் பொறுத்தே மகளிர் பிரிமீயர் லீக்கில் ஆறாவது அணியைச் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.