IPL 2025 GT vs LSG: சம்பவம் செய்வாரா சாய் சுதர்சன்? கில் படைக்கு முட்டுக்கட்டை போடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 GT vs LSG: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து ஆடி வருகிறது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுகிறது.
குஜராத்தை சமாளிக்குமா லக்னோ?
இந்த தொடரைப் பொறுத்தவரை 5 போட்டிகளில் 4 வெற்றியுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது. லக்னோ அணி 3 வெற்றியுடன் 6வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியைப் பொறுத்தவரை குஜராத் அணியுடன் ஒப்பிடும்போது பலம் குறைந்த அணியாக உள்ளது.
குஜராத் அணியில் சாய் சுதர்சன் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார். தொடர்ந்து நீடித்த மற்றும் நிலையான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். கேப்டன் சுப்மன்கில் அதிரடி காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. பட்லர் அதிரடி காட்டினால் குஜராத் வலுவான இலக்கை நிர்ணயிக்கும். அதேபோல, வாஷிங்டன் சுந்தர், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா அதிரடி காட்ட வேண்டியதும் அவசியம் ஆகும்.
பந்துவீச்சு சவால்:
லக்னோ அணியைப் பொறுத்தவரை ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், பிஷ்னாய் சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே குஜராத்தை கட்டுப்படுத்த முடியும். திக்வேஷ் சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, லக்னோ அணியில் மார்க்ரம், பூரண், டேவிட் மில்லர், அப்துல் சமத் அதிரடியாக ஆட வேண்டும். குறிப்பாக, தொடர்ந்து சொதப்பி வரும் கேப்டன் ரிஷப்பண்ட் அதிரடி காட்டினால் மட்டுமே அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும். அதேபோல, குஜராத் அணியின் பந்துவீச்சுக்கு தலைமை தாங்கும் சிராஜ் லக்னோவிற்கு சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
அதேபோல, சாய் கிஷோர், ரஷீத்கான், வாஷிங்டன் சுந்தர் சுழலில் மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும், வேகத்தில் பிரசித் கிருஷ்ணாவும் லக்னோவிற்கு நெருக்கடி தரலாம். இந்த தொடரில் பலமிகுந்த அணியாக திகழும் குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ தனது 4வது வெற்றியைப் பெறுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ப்ளேயிங் லெவன்:
லக்னோ அணியில் மார்க்ரம், பூரண், ரிஷப்பண்ட், ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், திக்வேஷ், ஆவேஷ்கான், ரவி பிஷ்னோய் விளையாடுகின்றனர்.
குஜராத் அணியில் சாய் சுதர்சன், சுப்மன்கில், பட்லர், வாஷிங்டன் சுந்தர், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, அர்ஷத் கான், ரஷீத்கான், சாய் கிஷோர், முகமது சிராஜ் ஆடுகின்றனர்.