IPL 2024: எதிரணியை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்; இதுவே கடைசியாக கூட இருக்கலாம்: வறுத்தெடுக்கப்படும் ஆர்சிபி!
IPL 2024: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஐபிஎல் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், வாழ்க்கையின் மீது பெரும் அதிருப்தியில் உள்ள பலருக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடியதாக அமைந்தது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதுதான். தொடரின் தொடக்கத்தில் இருந்து தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பெங்களூரு அணியைப் பார்த்து ஐபிஎல் ரசிகர்கள் தொடங்கி கமெண்டேட்டர்கள் வரை, “ பெங்களூரு அணிக்கு இம்முறையிம் ஈசாலா கப் நகி” என்று கிண்டலடித்துக் கொண்டு இருந்தனர்.
ஆனால் பெங்களூரு அணி லீக் போட்டிகளில் தான் விளையாடிய கடைசி 6 போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்தது மட்டும் இல்லாமல், ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதியும் பெற்றுள்ளது. இதில் தனது கடைசி லீக் போட்டியில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தவேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் களமிறங்கி, 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அட்டகாசமாக நான்காவது அணியாக ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டம் முடிந்த பின்னர், பெங்களூரு அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். போட்டி முடிந்த பின்னர் சென்னை அணி வீரர்கள் பெங்களூரு அணி வீரர்களுடன் கைகுழுக்க வரிசையாக காத்திருந்தனர். தோனி முதல் ஆளாக காத்திருந்தார். ஆனால் பெங்களூரு அணி வீரர்கள் வெற்றி திகைப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த தோனி, பெங்களூரு அணி வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியே வருவதற்கு முன்னரே டிரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்றார். இது ரசிகர்கள் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோனி ஏன் பெங்களூரு வீரர்களுடன் கைகுழுக்காமல் சென்றார் என்ற கேள்வி தோனியைச் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், “நீங்கள் போட்டியில் வென்றுவிட்டீர்கள். அதனால் கொண்டாட்டத்தில் உள்ளீர்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடிகின்றது. ஆனால் எதிரணியில் இருக்கும் தோனியின் கடைசிப் போட்டியாகக் கூட இது இருக்கலாம். அடுத்த ஆண்டு தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது யாருக்குத் தெரியும். இதனை மனதில் வைத்தாவது, பெங்களூரு அணி வீரர்கள் தோனியுடன் கைகுழுக்கச் சென்றிருக்க வேண்டும்” எனக் கூறினார்.
அதேபோல் ஹர்ஷா போக்லே கூறுகையில், “நீங்கள் உலகக் கோப்பையைக் கூட வெல்லுங்கள். ஆனால் உங்களின் எதிரணி வீரர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எதிரணி வீரர்களுடன் கைகுழுக்கிவிட்ட பின்னர் மீண்டும் உங்கள் கொண்டாட்டங்களை தொடரலாம். ஒரு போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் கைகுழுக்கிக் கொளவதற்கு முக்கிய காரணம் நாங்கள் எதிரிகள் கிடையாது என்பதை தெரிவிப்பதற்காகத்தான்” எனக் கூறியுள்ளார்.
சென்னை அணி வீரர்களுடன் கைகுழுக்கும்போது, விராட் கோலி தோனியை மைதானம் முழுவதும் தேடியுள்ளார். இறுதியில் சென்னை அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்றார் கோலி. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் பரவியது.