IPL 2024 MI vs SRH: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச முடிவு; சாதிக்குமா பேட் கம்மின்ஸ் படை?
IPL 2024 MI vs SRH: ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் அதேநேரத்தில் கோலாகலமாகவும் நடைபெற்றுவரும் 17வது ஐபிஎல் தொடரில் இன்று அதாவது மார்ச் மாதம் 27ஆம் தேதி முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்த ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
இரு அணிகளும் இதற்கு முன்னர் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது. ஹைதரபாத் அணி 9 முறை வெற்றியை தனதாக்கியுள்ளது. அதேபோல் கடைசியாக நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்புத் தொடரில் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் இரு அணிகளும் தங்களது முதல் வெற்றியைப் பெற முழு முயற்சியையும் இன்று வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. லீக் தொடரில் இந்த போட்டி 8வது போட்டி. இதற்கு முன்னர் நடைபெற்ற 7 லீக் போட்டிகளிலும் உள்ளூர் மைதானத்தில் விளையாடிய அணியே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் இதே முடிவு தொடருமா? இல்லை அந்த முடிவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்தான வீரர்களில் ஒருவராக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 200வது போட்டியில் விளையாடவுள்ளார். அதேநேரத்தில் இன்றைய போட்டி அவரது 245வது ஐபிஎல் போட்டியாகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முன்னதாக ரோகித் சர்மா டெக்கான் சார்ஜஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி கோப்பையையும் வென்றார். டெக்கான் அணி 2009ஆம் ஆண்டு கோப்பை வெல்லும்போது டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபாகா