(Source: ECI/ABP News/ABP Majha)
CSK vs RCB, IPL 2024: பெங்களூருவைப் பொளந்து கட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
CSK vs RCB, IPL 2024: பெங்களூரு அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் சென்னை அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் அனுஜ் ராவத் 48 ரன்களும் தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் சேர்த்திருந்தனர். சென்னை அணி சார்பில் முஸ்தபிகுர் 4 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார்.
அதன் பின்னர் தனது சொந்த மண்ணில் 174 ரன்களை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தொடங்கினர். இருவரும் தாங்கள் எதிர் கொண்ட முதல் பந்தினை பவுண்டரிக்கு விளாசினர். லாவகமான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய நிலையில் அணியின் ஸ்கோர் சீராக முன்னேறியது. நான்காவது ஓவரில் ருதுஆஜ் தனது விக்கெட்டினை 15 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த ரஹேனாவுடன் இணைந்து பவர்ப்ளேவில் அணிக்கு 62 ரன்களைக் குவித்தனர். 7வது ஓவரின் முடிவில் அதிரடியாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். அதன் பின்னர் வந்த டேரில் மிட்ஷெல் அதிரடியாக சிக்ஸர்கள் பறக்கவிட சென்னை அணி இலக்கை வெகுவிரைவில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
பெங்களூரு அணி விக்கெட் வீழ்த்த பல போராட்டங்களை மேற்கொண்டாலும் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 99 ரன்களாக இருந்தபோது ரஹானே தனது விக்கெட்டினை 27 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். இதையடுத்து மிட்ஷெல்லுடன் ஷிவம் துபே இணைந்து கொண்டார். 10.3 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களை எட்டியது.
பெங்களூரு அணி வீரர்கள் விக்கெட் வீழ்த்த தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். அதற்கு பலன் கிடைத்தாலும் அது சென்னை அணி இலக்கை நோக்கி முன்னேறுவதை தடுக்க எந்தவகையிலும் உதவவில்லை.
இறுதியில் சென்னை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.