CSK vs PBKS Match Highlights: கெத்து காட்ட நினைத்த சென்னை; சுத்து போட்டு தூக்கிய பஞ்சாப்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் CSK தோல்வி!
IPL 2024 CSK vs PBKS Match Highlights: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17 ஆவது ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்தார்.
இலக்கைத் துரத்திய பஞ்சாப்
அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனர்கள் முதல் சில ஓவர்களில் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தினை பஞ்சாப் அணியின் தொடக்காட்டக்காரர்களான பிரப்சிம்ரன் மற்றும் பேர்ஸ்டோவ் கூட்டணி வெளிப்படுத்தியது. இவர்களின் சிறப்பான ஆட்டத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவிற்கு எடுபடாமல் போனது. ஆட்டத்தில் நான்காவது ஓவரில் ப்ரப்சிம்ரன் தனது விக்கெட்டினை இழுந்து இருந்தாலும் அது பஞ்சாப் அணிக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழந்து 52 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது.
விக்கெட் கைப்பற்றிய துபே
சென்னையின் கேப்டன் ருத்ராஜ் தன்னிடமிருந்த அனைத்து பவுலர்களையும் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் இதற்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லை என்றாலும் ஆட்டத்தின் பத்தாவது ஓவரை வீசிய சிவம் தூபே சிறப்பாக பந்து வீசி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை கைப்பற்றினார். இது சென்னை அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தாலும் பஞ்சாப் அணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பேர்ஸ்ட்ரோவ் 30 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு 46 ரன்கள் சேர்த்திருந்தார்.
அடுத்து ஆட்டத்தின் 12 வது ஓவரின் கடைசி பந்தில் அதிரடி ஆட்டக்காரர் ரூசோ சென்னை அணியின் ஷர்துல் தக்கூர் வீசிய யார்கரில் தனது விக்கெட்டினை இழந்தார். தொடர்ந்து பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடியதால் கடைசி ஆறு ஓவர்களில் வெற்றிக்கு வெறும் 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் 26 ரன்களிலும், ஷஷாங்சிங் 25 ரன்களிலும் இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியது.