PBKS vs MI, 1 Innings Highlight: பஞ்சாபின் ஜிதேஷ் சர்மா - லிவிங்ஸ்டோன் மிரட்டல் அடி.. மும்பைக்கு 215 ரன்கள் இலக்கு
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற மும்பை:
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 16வது ஐபிஎல் தொடரில் இதுவரை 45 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டுள்ளது. மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகள் மோதிய போட்டியில், பஞ்சப் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில், மும்பை அணி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.
தவான் அதிரடி:
பஞ்சாபின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடினாலும், சக வீரர் ப்ரப்சிம்ரன் சிங் வெறும் 9 ரன்களில் நடையை கட்டினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் 30 ரன்கள் சேர்த்து இருந்தபோது, பியூஷ் சாவ்லா ஓவரில் ஆட்டமிழந்தார். இதனிடையே, நிதானமாக விளையாடி வந்த ஷார்ட் 27 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
லிவிங்ஸ்டோன் - ஜிதேஷ் அதிரடி:
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், லிவிங்ஸ்டோன் - ஜிதேஷ் சர்மா கூட்டணி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. மும்பையின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசித் தள்ளியது. இந்த கூட்டணி வெறும் 24 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது. இதனால், 32 பந்துகளில் லிவிங்ஸ்டோன் அரைசதம் கடந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 42 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக விளையாடி27 பந்துகளில் 49 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
மும்பை அணிக்கு இலக்கு:
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை சேர்த்தது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பியூஷ் சாவ்லா, 4 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷத் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார். மற்ற மும்பை பந்துவீச்சளர்கள் அனைவரும் ரன்களை வாரிக்கொடுத்தனர். குறிப்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர், தான் வீசிய 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 56 ரன்களை வாரிக்கொடுத்தார். இதையடுத்து பஞ்சாப் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.