IPL 2023, KKR vs LSG Match Highlights: ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி; மூன்றாவது அணியாக Play-Offக்குள் நுழைந்த லக்னோ..!
IPL 2023, KKR vs LSG Match Highlights: லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
IPL 2023, KKR vs LSG: ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் என்ற நிலையில் களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா தங்களது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். இதன் படி களமிறங்கிய லக்னோ அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. லக்னோ அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். ஆனால் தொடகக் வீரராக களமிறங்கி பொறுப்புடன் ஆடி வந்த டி காக் மட்டும் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அவரும் தனது விக்கெட்டை 11வது ஓவரின் முதல் பந்தில் இழந்தார். முக்கியமான போட்டி என்பதால் லக்னோ அணி சிறப்பான பேட்டிங் செய்யும் என எதிர்பார்த்த லக்னோ அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அதன் பின்னர் கைகோர்த்த பதோனி மற்றும் பூரன் கூட்டணி லக்னோ அணியை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களில் பூரன் மட்டும் கிடைத்த பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டி வந்தார். இவர்களின் பொறுப்பான கூட்டணியால் லக்னோ அணி 15 ஓவர்களில் 119 ரன்கள் சேர்த்தது.
இவர்களின் பொறுப்பான ஆட்டத்தினால் 36 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். 16வது ஓவருக்குப் பின்னர், பதோனி நிதானமாக ஆடவும், பூரன் அடித்து ஆடவும் செய்தார். இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் வேகமாக உயர ஆரம்பித்தது. இதனால் லக்னோ அணி 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி தனது அரைசதத்தினை எட்டிய பூரன், அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் லக்னோ அணியின் ரன்ரேட் குறைந்தது. இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. கொல்கத்தாவின் முதல் விக்கெட் 61 ரன்னில் இருந்தபோது விழுந்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் கொல்கத்தா அணி வெக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் போட்டி இரு அணிகளுக்கும் சாதகமாக அமைந்தது. கடைசி 5 ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. அதேநேரத்தில் கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தாலும், அதில் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள் என இருவர் மட்டும் தான் இருந்தனர். இந்நிலையில் 16வது ஓவரில் ரஸல் தனது விக்கெட்டை இழக்க, போட்டியில் லக்னோவின் கரங்கள் உயர்ந்தது. அதன் பின்னர் ஷர்துல் தாக்கூர் மற்றும் சுனில் நரேனும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழக்க போட்டியினை வெல்வதற்கான அத்தனை பொறுப்புகளும் ரிங்கு சிங் மீது விழுந்தது. இதனால் போட்டியின் 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரி விளாசிய ரிங்கு சிங் அந்த ஓவரில் மற்றுமொரு சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை எட்டினார்.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்தில் வைபவ். ஒரு ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் இரண்டு வைய்டு பந்துகள் வீசப்பட்டது. கடைசி மூன்று பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் பந்தில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் பவுண்டரி எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸர் எடுக்கப்பட்டது. இதனால் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தது.