IPL 2023: காயத்தில் இருந்து மீளாத வீரர்கள்.. முக்கிய பிளேயர்கள் மிஸ்.. இந்தாண்டு ஐபிஎல்-லில் யார் யார் இல்லை..?
ஐபிஎல் 2023 தொடரில் இந்தாண்டு எந்தெந்த அணிகளிலிருந்து எந்தெந்த வீரர்கள் விலகியுள்ளனர் என்ற பட்டியலை கீழே காணலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல் 2023) 16வது சீசன் வருகிற மார்ச் 31 ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டியுடன் இந்த சீசன் தொடங்குகிறது.
16வது சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே, அணிகளிலிருந்து முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இந்த ஆண்டு விலகியுள்ளனர். இந்தநிலையில், எந்தெந்த அணிகளிலிருந்து எந்தெந்த வீரர்கள் விலகியுள்ளனர் என்ற பட்டியலை கீழே காணலாம்.
ஜஸ்பிரித் பும்ரா:
ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்பாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கீரன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பாசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோரை விடுவித்தது.
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அண் முழுக்க முழுக்க வேகப்பந்து ஜஸ்பிரித் பும்ராவை நம்பி இருக்கிறது என்றே சொல்லலாம். இந்த சூழலில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக காணப்படும் பும்ரா வேகத்தை மும்பை அணி இந்தாண்டு தவறவிடும். கடந்த சில மாதங்களாகவே பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் பும்ரா, நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட்:
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து தப்பித்து தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டு வருகிறார். இதையடுத்து, இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்:
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித், பணிச்சுமை காரணமாக இந்தாண்டு நடைபெறும் தொடரைத் தவறவிட்டுள்ளார். ஐபிஎல் 2023 ஏலத்தில் கூட அவர் தனது பெயரை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாட் கம்மின்ஸ்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் பாட் கம்மின்ஸும் ஒருவர். கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்ட இவர், பிஸியான சர்வதேச அட்டவணை காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடவில்லை.
பிரசித் கிருஷ்ணா:
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கடந்த சில மாதங்களாக இடுப்பு எலும்பு முறிவு காரணமாக இந்த சர்வதேச தொடர் மற்றும் முதல் தர போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்த காயம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.
கைல் ஜேமிசன்:
ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவிருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஜே ரிச்சர்ட்சன்:
ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பிறகு, மற்றொரு மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் தொடை காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடரை இழக்க இருக்கிறார்.