IPL 2022: பெங்களூரு டூ மும்பை - ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் !
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி 210 ரன்கள் அடித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டிகள் என்னென்ன?
5.ஆர்சிபி-புனே வாரியர்ஸ்(2013): 130 ரன்கள்
2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புனே வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார். அந்தப் போட்டியில் பெங்களூரு அணி 263 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய புனே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இதனால் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
4.ஆர்சிபி-பஞ்சாப்(2015)-138 ரன்கள்:
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியிலும் கிறிஸ் கெயில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 117 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஏபிடிவில்லியர்ஸ் பக்கபலமாக 47 ரன்கள் விளாசி அசத்தினார். இதனால் பெங்களூரு அணி 226 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
3.கொல்கத்தா-ஆர்சிபி(2008)-140 ரன்கள்:
2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் மெக்கலம் அதிரடியாக விளையாடி 73 பந்துகளில் 158 ரன்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 223 ரன்கள் எடுத்தது. அதன்பின்பு ஆடிய ஆர்சிபி அணி வெறும் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2.ஆர்சிபி-குஜராத் லயன்ஸ்(2016)-144 ரன்கள்:
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி குஜராத் லயன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி மற்றும் ஏபிடிவில்லியர்ஸ் இருவரும் சதம் அடித்து அசத்தினர். விராட் கோலி 109 ரன்களும், டிவில்லியர்ஸ் 129 ரன்களும் விளாசினர். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை எட்டிப்பிடிக்க முயன்ற குஜராத் அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பெங்களூரு அணி போட்டியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1.மும்பை-டெல்லி(2017)-146 ரன்கள்:
2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. அந்தப் போட்டியில் சிம்மன்ஸ் மற்றும் பொல்லார்டு ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 212 ரன்கள் எடுத்தது. அதன்பின்பு ஆடிய டெல்லி அணி 66 ரன்களில் ஆட்டமிழந்தது. ஹர்பஜன் சிங் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்