IPL 2022: எப்படி லாபம் ஈட்டப் போகிறது ஐபிஎல்-ன் புதிய அணிகள்?
மீடியா உரிமைகள், பிரான்ஸைசி விளம்பர வருமானம், ஒட்டுமொத்த ஐபிஎல்-ல் பிராண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் என ஒவ்வொரு அணியும் வருமானம் ஈட்டுகின்றன.
ஐபிஎல் புதிய அணிகளுக்கான ஏலம் சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் ஏலம் எடுக்கப்பட்டன. அடிப்படை விலையாக ரூ.2000 கோடி நிர்ணயம் செய்யப்பட்டன. ஆனால் இரு அணிகளுக்கும் இதைவிட சில மடங்கு கொடுத்து ஏலத்தில் எடுத்தன.
லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7090 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் என்னும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. இந்த ஏலத்தில் போட்டியிட்ட அதானி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய அணிகளுக்கு 5,000 கோடி அளவில் மட்டுமே ஏலம் கேட்டதால் இவர்களால் வெற்றி அடையமுடியவில்லை. இதுதவிர கோடக், டாரண்ட் பார்மா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பல பெரும் தலைகளும் ஏலத்தில் வெற்றிபெறமுடியவில்லை.
கால்பந்து போட்டிகளில் சர்வதேச அளவில் பிரபலமான இங்கிலீஷ் பிரிமிர் லீக் அணிகளை விட ஐபிஎல் அணி ஏலம் அதிகளவில் எடுக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு இபிஎல்-ல் ஒரு அணி 41 கோடி டாலருக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் லக்னோ அணி இதை விட இரு மடங்குக்கு ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது. தற்போதைய டாலர் மதிப்பில் 94.6 கோடி டாலர் அளவுக்கு லக்னோ அணி ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.
எப்படி செயல்படும்?
ரூ.7090 கோடி அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டிருந்தாலும் இந்த தொகையை ஒட்டுமொத்தமாக செலுத்த தேவையில்லை. அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த தொகையை பிரித்து செலுத்தலாம். அப்படியானால் ஒரு ஆண்டுக்கு சுமார் 700 கோடி ரூபாய் செலவாகும். தவிர வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் பயணம் இதர செலவுகளுக்கு என மொத்த செலவு ஓர் ஆண்டுக்கு அதிகம்பட்சம் ரூ.850 கோடி மட்டுமே செலவாகும். அதனால் மொத்தமாக ரூ.7,090 கோடி என பார்க்காமல் ஆண்டுக்கு 850 கோடி இருந்தால் போதும்.
மீடியா உரிமைகள், பிரான்ஸைசி விளம்பர வருமானம், ஒட்டுமொத்த ஐபிஎல்-ல் பிராண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் என ஒவ்வொரு அணியும் வருமானம் ஈட்டுகின்றன. சராசரியாக ஒவ்வொரு அணியும் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு தற்போது லாபம் ஈட்டுகின்றன.
இதில் மீடியா உரிமம் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் கிடைக்கிறது. தற்போது மீடியா உரிமத்தை வைத்திருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உரிமம் 2022-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஏலம் விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது ரூ,16347 கோடி ரூபாய்க்க்கு ஸ்டார் ஏலம் எடுத்திருக்கிறது. இதில் இருந்து இரண்டு முதல் மூன்று மடங்கு அளவுக்கு கூடுதலாக ஏலம் கேட்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் அணிகளுக்கு கிடைக்கும் வருமானம் உயரும்.
அதேபோல பல ஆண்டுகளுக்கு முன்பு பெப்சிகோ நிறுவனம் ஐபிஎல் நிறுவனத்தின் உரிமத்தை வைத்திருந்தது. அதற்கடுத்து இந்த உரிமத்தை ஆறு மடங்குக்கு மேல் (சுமார் ரூ.2190 கோடி) கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்த டைட்டில் உரிமமும் 2022-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அதனால் டைட்டில் ஸ்பான்ஸர் உரிமமும் மேலும் சில மடங்குக்கு மேல் ஏலம் போகலாம் என தெரிகிறது.
இதனால் 2023-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு அணிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகபட்சம் ஓர் ஆண்டுக்கு சுமார் 300 கோடி மட்டுமே செலவு செய்ய வேண்டி இருக்கும். மீதமுள்ள தொகை வருமானமாகவே கிடைத்துவிடும் என்பதால் துணிச்சலாக பெரிய தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது.
தற்போது பழைய அணிகள் அனைத்தும் செலுத்த வேண்டிய தொகையை செலுத்திவிட்டதால் அந்த அணிகள் தற்போது லாபத்தில் செயல்படுகின்றன. அதனால் அந்த அணிகளின் சந்தை மதிப்பும் உயர்ந்திருக்கிறது. அதனால் நீண்ட கால அடிப்படையில் இந்த அணிகள் லாபம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதாக இந்த துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்