KKR vs RCB, 1 Innings Highlight: 100 ரன் கூட எடுக்காத கோலி படை...கொல்கத்தாவுக்கு 93 ரன் வெற்றி இலக்கு!
இந்த போட்டியில், 4 ஓவர்களை வீசிய தமிழ்நாடு வருண், 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
கொரோனா பரவலை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், மும்பையை தோற்கடித்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து, இன்று இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று மோதின. ஐபிஎல் வரலாற்றில், இதுவரை இரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா 15 முறையும், பெங்களூரு 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
சொதப்பிய ஆர்சிபி பேட்ஸ்மேன்கள்
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டி, கோலிக்கு 200-வது ஐபிஎல் போட்டி. இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு படிக்கலுடன் கோலி ஓப்பனிங் களமிறங்கியது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் எல்பிடபிள்யூ ஆனதால் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. அதனை அடுத்து, கோலி ரிவ்யூ கேட்க, மூன்றாவது நடுவர் முடிவும் கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், ரிவ்யூவும் ‘லாஸ்’ ஆக கேப்டன் கோலி 5 ரன்களுக்கு வெளியேறினார்.
கோலியை அடுத்து கே.எஸ் பரத் களமிறங்கினார். ஆனால், ஃபெர்குசன் வீசிய ஆறாவது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளொயேறினார் படிக்கல். 50 ரன்கள் எட்டுவதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி, ஸ்கோர் செய்ய திணறியது. படிக்கலை தொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். அப்போது பெளலிங் செய்ய வந்த ரஸல், பரத் விக்கெட்டை வீழ்த்தினார். ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக பெவிலியன் திரும்பி கொண்டிருந்த நிலையில், மேக்ஸ்வெலும் ஏபிடியும் அதிரடி காட்டுவார்கள் என எதிர்ப்பர்க்கப்பட்டது. ஆனால், வந்த வேகத்தில் முதல் பந்திலேயே டக்-அவுட்டாகி வெளியேறினார் ஏபிடி. ரஸல் பந்துவீச்சில் க்ளீன் பவுல்டானார் ஏபிடி.
அசத்திய தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி ; 4 - 13 - 3
ஏபிடி வெளியேரியதை அடுத்து, பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் அவுட்டாக்கினார் வருண். ஒரே ஓவரில், மேக்ஸ்வெல், ஹசரங்கா ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்த அவர், அடுத்த ஓவர் வீசவந்தபோது சச்சின் பேபியின் விக்கெட்டை எடுத்தார். அதுமட்டுமின்றி, 16 வது ஓவரில் ஜேமிசனை ரன் அவுட்டாக்கி பெங்களூருவின் 8வது விக்கெட்டை தூக்கினார். அதனை அடுத்து களமிறங்கிய, ஷர்ஷல் பட்டேல் விக்கெட்டையும் ஃபெர்குசன் எடுக்க, 85 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டவே ஆர்சிபி திணறியது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிராஜ், சாஹல் ஆகியோர் 100 ரன்களை எட்ட போராடினர். இந்த போட்டியில், 4 ஓவர்களை வீசிய வருண், 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஈஸியான டார்கெட்
19-வது ஓவரில் ரஸல் பந்துவீச்சில் சிராஜ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், 19வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி. இதனால், 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.