GT vs LSG, IPL 2023: ஆதிக்கத்தை தொடருமா குஜராத்?.. டாஸ் வென்ற லக்னோ பீல்டிங் தேர்வு
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
குஜராத் - லக்னோ மோதல்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 51வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில், குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதற்கு பழிவாங்கும் நோக்கில் க்ருணால் பாண்ட்யா தலைமையில் லக்னோ அணி களமிறங்குகிறது. aதேநேரம், கேப்டன் ராகுல் இல்லாமல் களமிறங்குவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
புள்ளிப்பட்டியல் விவரம்:
குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ரஷித்கான் மற்றும் நூர் அஹமத்தின் சிறப்பான பந்துவீச்சாள் குஜராத் அணி வெற்றிபெற்றது. அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை கடைசியாக நடந்த நான்கு போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றாலும், புள்ளிகள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. இதனிடையே, முதல் முறையாக தம்பி ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக அண்ணன் க்ருணால் பாண்டியா கேப்டனாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
நேருக்கு நேர்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால், குஜராத் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது. 2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோதின. அந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 2022ம் ஆண்டில் பிளே ஆஃப்களில் மோதியது. அதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஐபிஎல் சீசனிலும் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மைதானம் எப்படி?
அகமதாபாத்தில் உள்ள ஆடுகளம் கடந்த சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 179 ஆக உள்ளது. அதேபோல், டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது கிட்டதட்ட 75 சதவீத விக்கெட்கள் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர். முந்தைய போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் எட்டு விக்கெட்கள் வீழ்ந்ததை தொடர்ந்து, பவர்பிளேவில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுப்பது வெற்றிகான வாய்ப்பாக அமையும். ஏனெனில், கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது.