CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிராக களமிறங்குவாரா ஸ்விங் கிங் புவனேஷ்வர்? படிதார் முடிவு என்ன?
CSK vs RCB: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அனுபவ பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் 18வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - முதன்முறை சாம்பியனாக துடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
ஆர்சிபி - சிஎஸ்கே:
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ப்ளே ஆஃப் கனவை ஆர்சிபி தகர்த்த பிறகு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் போட்டி இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
5 முறை சாம்பியனாகிய சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய சவால் ஆகும். இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று வெற்றியைத் தொடரப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புவனேஷ்வர் களமிறங்குவாரா?
சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இரு அணிகளும் அதற்கு ஏற்றவாறு களமிறங்கும். ஆர்சிபி அணி தங்களது முதல் போட்டியான கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் ரஷீக்தருக்கு வாய்ப்பு வழங்கியது. சுனில் நரைன் விக்கெட்டை அவர் கைப்பற்றினாலும் அவர் ரன்களை வாரி வழங்கினார்.
இன்று நடக்கும் போட்டியில் பெங்களூர் அணிக்காக புவனேஷ்வர்குமார் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புவனேஷ்வர் குமாரும் தற்போது முழு உடல்நலத்துடன் இருப்பதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் போட்டியில் காயம் காரணமாக களமிறங்காத புவனேஷ்வர்குமார் இன்றைய போட்டியில் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.
யஷ் தயாள், ஹேசில்வுட் ஆகிய பந்துவீச்சாளர்களுடன் ஆர்சிபி அணியில் சுழலுக்கு குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா, லிவிங்ஸ்டன், உள்ளனர். கடந்த போட்டியில் மும்பையின் இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் நல்ல தாக்கத்தை சுழலில் ஏற்படுத்தினார். இதனால், பெங்களூர் அணி சுவப்னில் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
படிதாரின் முடிவு என்ன?
அதேசமயம், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரவீந்திரா, ஷிவம் துபே, ஜடேஜா, தோனி போன்ற மிகப்பெரிய பேட்டிங் பட்டாளத்திற்கு எதிராக புவனேஷ்வர்குமார் போன்ற அனுபவம் வாய்ந்த ஸ்விங் பந்துவீச்சாளர் அணியில் இருப்பது பலமாக கருதப்படுகிறது.
கேப்டன் ரஜத் படிதார் ரஷீக்தருக்கு வாய்ப்பு இன்று தொடர்ந்து வழங்குவாரா? அல்லது அவருக்கு பதிலாக அனுபவ வீரர் புவனேஷ்வர்குமாருக்கு வாய்ப்பு வழங்குவாரா? கூடுதல் சுழற்பந்துவீச்சாளரும், ஆல்ரவுண்டருமான சுவப்னில் சிங்கை களமிறக்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பைக்கு எதிராக கலீல் அகமது வேகத்தில் கலக்கியதால் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது.
சென்னையின் சுழல் சாம்ராஜ்யம்:
சென்னை அணியைப் பொறுத்தவரையில் ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது மிகப்பெரிய பலமாக சுழலுக்கு உள்ளனர். கடந்த போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய கலீல் அகமதும் அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளார். இரு அணிகளும் வெற்றியைத் தொடரவே அதிக ஆர்வம் காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.




















