CSK vs KKR Final : சென்னை கேப்டன் தோனி VS கொல்கத்தா கேப்டன் மோர்கன் - 2021 ஐ.பி.எல்.லில் பெர்மாமன்ஸ் எப்படி?
நடப்பாண்டில் சென்னை கேப்டன் தோனி மற்றும் கொல்கத்தா கேப்டன் மோர்கன் இருவரும் மோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தியுள்ளனர். இருவரும் இன்று தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த தொடரில் இரு அணிகளுக்கும் பலமும், பலவீனமாகவும் இருப்பது அந்தந்த அணியின் கேப்டன்களே.
சென்னை கேப்டன் தோனி :
2008ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக பொறுப்பு வகித்து வரும் 40 வயதான தோனிக்கு, இந்த தொடரே கடைசி ஐ.பி.எல் தொடராக வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் கோலோச்சி வரும் தோனியின் பேட்டிங், இந்த தொடரில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. டெல்லிக்கு எதிரான போட்டியில் 6 பந்தில் 18 ரன்கள் எடுத்து தன் மீதான விமர்சனத்தை தோனி முடிவுக்கு கொண்டு வந்தார். இருப்பினும் அவரிடம் இருந்து மிகப்பெரிய இன்னிங்சை சென்னை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
219 ஐ.பி.எல். ஆட்டங்களில் ஆடியுள்ள எம்.எஸ்.தோனி இதுவரை 23 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 746 ரன்களை குவித்துள்ளார். 2020ம் ஆண்டு 200 ரன்களை மட்டுமே குவித்த தோனி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் 15 போட்டிகளில் ஆடி வெறும் 114 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இந்த தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக தோனி எடுத்தது 18 ரன்களே ஆகும். கடைசி கட்டத்தில் ஒற்றை ஆளாக வெற்றியைத் தேடித்தரும் தோனி, கடந்த சில காலங்களாக பார்மில் இல்லாமல் இருப்பது பெரிய பலவீனம் ஆகும். டெல்லிக்கு எதிரான ஆட்டம் மூலம் அவர் பார்முக்கு திரும்பியுள்ளதாக ரசிகர்கள் நம்புகின்றனர்.
கொல்கத்தா கேப்டன் மோர்கன் :
கொல்கத்தா அணியின் கேப்டனாக கடந்த சில சீசன்களாக பொறுப்பு வகிப்பவர் இயான் மோர்கன். கேப்டன்சியை கவனிப்பதற்காக மட்டும்தான் இவர் அணியில் உள்ளார் என்று இவர் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளது. அந்தளவிற்கு இவரது பேட்டிங் பார்ம் கவலைக்குரியதாக உள்ளது. இதுவரை 82 ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் ஆடியுள்ள மோர்கன் 1,401 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 5 அரைசதங்கள் அடங்கும்.
கடந்த சீசனில் 14 போட்டிகளில் 418 ரன்களை குவித்த மோர்கன், இந்த சீசனில் 16 போட்டிகளில் ஆடி 129 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 47 ரன்களை எடுத்துள்ளார். அதுவும் முதலாம் கட்ட ஐ.பி.எல். போட்டிகளில் எடுத்த ரன் ஆகும். கடந்த 10 ஐ.பி.எல். போட்டிகளில் மோர்கன் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்துள்ளார். இவர் பார்மிற்கு திரும்பினால் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
உலககோப்பையை வென்றவர்கள் :
சென்னை கேப்டன் தோனியும், கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கனும் நடப்பு தொடரில் பெரியளவில் பேட்டிங்கில் ஆதிக்கத்தை செலுத்தாவிட்டாலும், இருவரும் உலகின் தலைசிறந்த கேப்டன்கள் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்தியாவிற்காக 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனியும், கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திற்காக முதன்முறையாக மோர்கனும் உலககோப்பையை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் இவர்களது சிறப்பான தலைமைப் பண்பாலும், கள வியூகத்தினாலும்தான் இரு அணிகளும் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளன. இருவரும் களத்தில் எந்தவித சூழல் ஏற்பட்டாலும் பொறுமையுடன் நிதானமாகவே காணப்படுபவர்கள் என்பது இருவரின் கூடுதல் பலமாகும். இன்று இரவு நடைபெறும் போட்டியில் யாருடைய தலைமைப் பண்பிற்கு வெற்றி கிடைக்கப்போகிறது என்பதை காணலாம்.