CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
ஐபிஎல் தொடரில், 2-வது தோல்வியை சிஎஸ்கே அணி நேற்று சந்தித்தது. இதில் தோனியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் தோனியின் முட்டி குறித்த உண்மையை போட்டுடைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏற்கனவே கடந்த போட்டியில் ஆர்சிபி அணியிடம் தோல்வியடைந்த நிலையில், இவ்விரு போட்டிகளிலும் தோனி களமிறங்கிய நிலை மற்றும் அவரது ஆட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், அவரது ஃபிட்னஸ் குறித்த முக்கிய தகவலை, அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் வெளியிட்டுள்ளார்.
ஆர்சிபி அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
கடந்த 28-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த ஆட்டத்தில், சிஎஸ்கே-வின் சொந்த மண்ணில், 9-வது நிலையில் தோனி களமிறங்கினார். சென்னையில் போட்டி நடைபெற்றாலே, ரசிகர்கள், தோனியையும், அவரது ஆட்டத்தையும் பார்க்கத்தான் பெருமளவில் கூடுவார்கள்.
இந்நிலையில், முன்பே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி, 9-வது நிலையில் களமிறங்கியதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். எனினும், 16 பந்துகளை சந்தித்த தோனி, 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் முன்பே களமிறங்கியிருந்தால், வெற்றி இலக்கை எட்டியிருக்கலாம் என்று ஒரு தரப்பும், அப்படி இல்லாவிட்டால் கூட, இத்தனை ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்க மாட்டோம் என்று ஒரு தரப்பு கூறியது.
ஆனால், மற்றொரு தரப்போ, வழக்கமாக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தோனி, எதிர் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார். ஆனால், அவர் தற்போதெல்லாம் அப்படி ஆடுவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. எதற்காக அவர் 9-வது நிலையில் களமிறங்க வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.
ராஜஸ்தான் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இந்த நிலையில், கவுஹாத்தியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிஎஸ்கே-வின் வழக்கமான வெற்றி ஜோடியான ஜடேஜா, தோனி ஜோடி களத்தில் இருந்தது. ஆனால், அந்த ஜோடியால் அணிக்கு வெற்றி ஈட்டித் தர முடியவில்லை. வழக்கமாக கடைசி ஓவரில், பவுலரை துவம்சம் செய்யும் தோனி, அவுட்டாகி வெளியேறினார். முந்தைய ஆட்டத்தில், 9-வது நிலையில் களமிறங்கியதால் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த போட்டியில் 7-வது நிலையில் தோனி களமிறங்கினார். ஆனாலும், அவரால் வழக்கமான ஆட்டத்தை ஆடி, அணிக்கு வெற்றியை தேடித் தர முடியாததால், தற்போது விமர்சனங்கள் வலுத்துள்ளன.
தோனி குறித்து அணியின் பயிற்சியாளர் போட்டுடைத்த உண்மை என்ன.?
இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தோல்விக்குப் பிறகு பேட்டியளித்த சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், தோனியின் மூட்டு பழைய நிலையில் இல்லை என்றும், அதனால், அவரால் 10 ஓவர்கள் நின்று ஆட முடியாது என்பதால், கடைசியில் இறங்கி, அவரால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறார் என கூறியுள்ளார்.
“அவரது மூட்டு குறித்து தோனிக்கு புரிந்துள்ளது, அது வழக்கமாக இருப்பதுபோல் இல்லை. அவர் நன்றாகத்தான் நகர்கிறார், ஆனால் அவரது மூட்டுகளில் தேய்மானம் உள்ளது. 10 ஓவர்கள் களத்தில் நின்று அவரால் ரன்களை ஓடி எடுக்க முடியாது. அதனால், அன்றைய சூழலுக்கு ஏற்ப களமிறங்கி, அவரால் முடிந்ததை கொடுக்கிறார். இந்த போட்டியைப் போல், ஆட்டம் இருதரப்பிற்கும் சமநிலையில் இருக்கும் நேரத்தில் சற்று முந்தைய நிலையில் அவர் களமிறங்குகிறார். மற்ற நேரங்களில் மற்ற வீரர்களுக்கு அவர் வாய்ப்புகளை வழங்குகிறார் என ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.
எனினும், 43 வயதானாலும், சிறிதளவே பேட்டிங் செய்தாலும், அணியை வழிநடத்துவதிலும், விக்கெட் கீப்பிங்கிலும் அவர் அணிக்கு தேவையான மிகவும் மதிப்புமிக்க வீரராக திகழ்கிறார் என்றும் ஃபிளமிங் கூறியுள்ளார்.
தோனிக்கு ஒரு நியாயம், மற்றவர்ளுக்கு ஒரு நியாயமா.? - நெட்டிசன்கள்
மகேந்திர சிங் தோனிக்கு தற்போது வயதாகிவிட்டது, அதோடு மூட்டு தேய்மானமும் உள்ளது என பயிற்சியாளரே தெரிவித்துவிட்டார். ஆனாலும், ஓய்வு பெறாமல் தோனி ஐபிஎல்-லில் விளையாடி வருகிறார். முந்தைய காலங்களில், அதாவது, தோனி அணிக்குள் வந்து அதிரடி காட்டிய அவரது இளமைக் காலங்களில், இளையோருக்கு வாய்ப்பளிக்கிறேன் என்ற போர்வையில், அப்போது இந்திய அணிக்காக ஆடிக்கொண்டிருந்த, கங்குலி, சேவாக், விவிஎஸ் லட்சுமணன் போன்ற சாதனைகள் படைத்த லெஜெண்டரி வீரர்களை, வயது உள்ளிட்ட காரணங்களால் ஓரங்கட்டினார்.
இந்த நிலையில், தற்போது வயதானாலும் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெற மறுக்கும் அவர், இந்திய அணியில் இருந்தபோது, மற்ற மூத்த வீரர்களுக்கு செய்தது நியாயமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். தோனிக்கு ஒரு நியாயம், மற்ற வீரர்களுக்கு ஒரு நியாயமா எனவும் கேட்கின்றனர்.
இந்த விமர்சனங்களை தோனி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார், ஒருவேளை தனது பேட்டால் பதிலளிப்பாரா என்பதை, வரும் போட்டிகளில் இருந்துதான் தெரிந்துகெள்ள வேண்டும்.




















