Gautam Gambhir: பிசிசிஐ வேண்டாம், கொல்கத்தாவே போதும் - மும்பை, சென்னையை வீழ்த்துவதே நோக்கம் - கம்பீர்
Gautam Gambhir: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வருவார் என கருதப்படும், கவுதம் கம்பீர் தனது அடுத்த இலக்கு என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.
Gautam Gambhir: ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவை மிகவும் வெற்றிகரமான அணியாக மாற்ற விரும்புவதாக கம்பீர் பேசியுள்ளார்.
இந்திய அணி பயிற்சியாளராகிறாரா கம்பீர்?
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் இடத்தை, கவுதம் கம்பீர் அடைவாரா? என்பதுதான் தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. புதிய பயிற்சியாளர் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொறுப்பேற்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும், பயிற்சியாளர் பதவிக்கு யார் யார் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதில் குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் அறிக்கையின்படி, இந்தியர் ஒருவர் தான் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளார். கம்பீர் தான் பயிற்சியாளர் ஆவார் என கூறப்படும் நிலையில், கொல்கத்தா அணியுடன் சேர்ந்து பயணிப்பது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கான பேட்டியில் கம்பீர் விரிவாக பேசியுள்ளார்.
கொல்கத்தாவை சிறந்த அணியாக மாற்ற வேண்டும் - கம்பீர்:
கொல்கத்தா அணியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக பேசும்போது, "இன்று நாங்கள் எங்களது மூன்றாவது கோப்பையை வென்றதால் இதைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் நீங்கள் என்னைக் கேட்டால், மும்பை மற்றும் சென்னை அணிகளை விட இன்னும் இரண்டு கோப்பைகள் பின்தங்கி இருக்கிறோம். இன்று நான் பேசுபொருளாக் இருக்கிறேன், ஆனால் ஐபிஎல் தொடரில் நாங்கள் இன்னும் வெற்றிகரமான அணியாக மாறவில்லை என்ற பசி இருக்கிறது, அது நடக்க நாங்கள் இன்னும் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும். அது நடந்தால் ஐபிஎல்லில் அதைவிட எனக்கு எந்த ஒரு பெரிய உணர்வும் இருக்காது. அதற்கு நிறைய கடின உழைப்பு தேவைப்படும். அதேநேரம், அதற்கான பயணம் தான் தற்போது தொடங்கியுள்ளது” என கம்பீர் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு கம்பீர் தொடர்ந்து கொல்கத்தா அண்யில் பயணிக்கவே விரும்புவதை காட்டுகிறது.
புதிய பயிற்சியாளர் யார்?
இந்திய ஆடவர் அணிக்கான புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. கம்பீர் அந்த பதவிக்கு விண்ணப்பிக்காவிட்டாலும், அவரை பயிற்சியாளராக நியமிப்பதற்காப்ன பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன.
முதலில் ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோரை பிசிசிஐ அணுகியதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல்களை நிராகரித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்தியர் ஒருவரே ஆடவர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.