இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷெஃபாலி அரைசதம்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் குவித்துள்ளது.
![இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷெஃபாலி அரைசதம்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம் Indian women's team fighting to avoid defeat against England Women in one-off test இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷெஃபாலி அரைசதம்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/19/f510dcf7068fc80f4fa14b84863b7aaf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்திருந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 4* ரன்களுடனும், தீப்தி சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய உடன் ஹர்மன்பிரீத் கவுர் விரைவில் எக்லெஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் வந்த வீராங்கனைகள் யாரும் சரியாக விளையாடாமல் ஒற்றை இழக்க ஸ்கோரில் வேகமாக பெவிலியன் திரும்பினர். பூஜா மட்டும் தீப்தி சர்மாவிற்கு சற்று துணை கொடுத்தார். அவரும் 12 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் தீப்தி சர்மா 29* ரன்களுடம் இருந்தார். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 165 ரன்கள் இந்தியா பின்னிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கியது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 8 ரன்களில் விரைவாக ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் முதலாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா மூன்றாவது இடத்தில் களமிறங்கினார்.
அவரும் ஷெஃபாலி வர்மாவும் இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 96 ரன்கள் குவித்த ஷெஃபாலி வர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்தார். இதன்மூலம் 17 வயது 139 நாட்களில் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்தினார். மிகவும் குறைவான வயதில் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்தவர் என்ற சாதனையை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 17 வயது 107 நாட்களில் இந்தச் சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இரண்டாவது இடத்தை ஷெஃபாலி வர்மா பிடித்துள்ளார். இந்திய அணி 24.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் குவித்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. எனினும் அதன்பின்னர் மழை நிற்காததால் மூன்றாம் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
இன்று நான்காவது மற்றும் கடைசி நாள் இந்திய அணி இன்னும் 82 ரன்கள் பின்னிலையில் உள்ளது. ஆகவே உடனடியாக அந்த ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணிக்கு நல்ல ஸ்கோர் சேஸ் செய்ய கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க: Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)