(Source: Poll of Polls)
டி20 உலகக் கோப்பைக்கு முன் இரண்டு பயிற்சி போட்டிகளில் களமிறங்கும் இந்திய அணி-யாருடன் தெரியுமா?
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டிகளுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு அடுத்த மாதம் 17ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு நல்ல போட்டி பயிற்சியாக வீரர்களுக்கு அமையும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முறை டி20 உலகக் கோப்பையும் யுஏஇயில் நடைபெறுவதால் ஆடுகளத்தை வீரர்கள் புரிந்து கொள்ள ஐபிஎல் தொடர் நல்ல உதவியாக அமையும். இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகளுக்கு இரண்டு பயிற்சி போட்டிகள் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்திய கிரிக்கெட் அணிக்கும் டி20 சூப்பர் 12 போட்டிகளுக்கு முன்பாக இரண்டு பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடர் முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு அக்டோப்டர் 18ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்த்து முதல் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது. இந்த இரண்டு பயிற்சி போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலில் நேரலையாக வரும் என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது. அந்தச் சுற்று போட்டிக்கு முன்பாக இரண்டு வலுவான அணிகளுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது வீரர்களுக்கு நல்லதாக அமைந்துள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 31ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. பின்னர் நவம்பர் 3ஆம் தேதி ஆஃப்கானிஸ்தனுடன் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகளுடன் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது.
The Squad is Out! 🙌
— BCCI (@BCCI) September 8, 2021
What do you make of #TeamIndia for ICC Men's T20 World Cup❓ pic.twitter.com/1ySvJsvbLw
இம்முறை சூப்பர் 12 சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் சூப்பர் 12 சுற்று மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க:ஐபிஎல்: மும்பையை சம்பவம் செய்த சிஎஸ்கேவின் டாப் 5 வெற்றிகள்!