Ind vs Eng: செஞ்சுரி வேணும் கோலி.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சொன்னது என்ன?!
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி மிகப்பெரிய சதமடிப்பது தற்போது மிகவும் முக்கியமானது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தனது யூ டியூப் தொலைக்காட்சியில் வெளியிட்ட வீடியோவில், “இந்திய வீரர்களின் அனுபவம் பெரிய ரன்களை குவிப்பதற்கு காரணமாக இருந்துள்ளது. ஆனால், இந்த தொடரில் அவர்கள் இதை சிறப்பாக செய்யவில்லை. அது நடக்காதவரை, இந்தியாவில் இந்த தொடரில் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல முடியாது. அதேபோல, விராட் கோலி மிகப்பெரிய சதம் அடிப்பதும் மிகவும் முக்கியமானது. ரஹானேவும், புஜாராவும் அவ்வப்போது ரன்களை அடிக்கின்றனர். ஆனால், அவர்கள் இதுவரை மிகப்பெரிய ரன்களை குவிக்கவில்லை.
ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்பவர். அவர் 150 முதல் 200 ரன்கள் வரை எடுக்கும் ஆற்றல் கொண்டவர். ஆனால், அவர் இதுவரை அதை செய்யவில்லை. இந்திய அணியின் மூத்த வீரர்கள் மிகப்பெரிய ரன்களை குவிக்காத வரை, இந்தியா இந்த தொடரில் சிரமப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
கோலி பார்மில் இருந்தபோது சதத்திற்கு பிறகு சதம் அடித்தார். கோலி மிகவும் சிறப்பாக ஆடுகிறார். ஆனால், அவரது கவனம் ஆப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை ஆடும்போது சிதறுகிறது. அவரது ஆட்ட நுணுக்கம் என்பது மிகவும் அற்புதமானது. ஆனால், இந்த தொடரில் அவர் அதே முறையில் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறார்.
அவர் ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வரும் பந்துகளை ஆடும்போது தனது உடலை விட்டு சற்று விலகி பேட்டிங் செய்கிறார். ஒருவேளை அவர் தனது உடலுக்கு நெருக்கமாக அந்த ஷாட்டை தொடர்ச்சியாக ஆடினால் ரன்களை சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் செய்யும் வல்லமை கொண்டவர். ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சதமடிக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த தொடர் தொடங்கியது முதல் அவர் ஆண்டர்சன், ராபின்சன் பந்துவீச்சில் ரன்களை எடுக்கத் தடுமாறி வருகிறார். இந்த தொடரில் ஆண்டர்ன், ராபின்சன், சாம்கரன் பந்துவீச்சிலே அவர் இதுவரை ஆட்டமிழந்துள்ளார். கடந்த போட்டியில்தான் கோலி சுமார் 9 இன்னிங்ஸ்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் தனது அரைசதத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.