Yuvraj Singh Comeback: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் களமிறங்குகிறாரா யுவராஜ் சிங்?
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் களத்தில் இருப்பேன் என்று நம்புவதாக யுவராஜ்சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாகவும், ஆல்ரவுண்டராகவும் வலம் வந்தவர் யுவராஜ்சிங். இந்திய அணியின் மேட்ச் வின்னராக பல போட்டிகளில் வலம் வந்தவர். 2007 உலககோப்பை தோல்விக்கு பிறகு டிராவிட் இந்திய அணியின் கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, யுவராஜ்சிங்தான் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தோனி கேப்டனாக்கப்பட்டார். இருப்பினும், தோனியுடன் சேர்ந்த பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த நிலையில், உலககோப்பை டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுடன் தொடர்ச்சியாக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் தோல்வியை ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், யுவராஜ்சிங் மீண்டும் இந்திய அணிக்கு வந்தால் மட்டுமே இந்திய அணியால் கோப்பையை கைப்பற்ற முடியும் என்று கூறியுள்ளனர். அவரால் மட்டுமே 4வது இடத்திற்கான பேட்ஸ்மேனின் இடத்தை நிரப்ப முடியும் என்றும், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்றும் பலரும் யுவராஜ்சிங்கின் சமூக வலைதள பக்கங்களிலே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் இந்த கோரிக்கைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள யுவராஜ்சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக பதிலளித்துள்ளார். 39 வயதான அவர் அளித்துள்ள பதிலில், கடவுள் மட்டுமே விதியை தீர்மானிப்பார். மக்களின் கோரிக்கைக்கு இணங்க அடுத்தாண்டு பிப்ரவரி களத்தில் இருப்பேன் என்று நம்புகிறேன். இதுபோன்ற உணர்வு வேறு எதிலும் இல்லை. உங்களது அன்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. எனக்கு நிறைய அர்த்தங்களை உணர்த்தியுள்ளது. நமது அணிக்கு தொடர்ந்து துணையாக இருப்போம். உண்மையான ரசிகர்கள் கடினமான நேரங்களில் தனது ஒத்துழைப்பை வெளிப்படுத்துவார்கள்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவிடன் இங்கிலாந்து அணிக்கு எதிராக தான் ஆடிய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் ஒன்றையும் வீடியோவாக யுவராஜ்சிங் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் பின்னணியில் தேசபக்தி நிறைந்த ஹிந்தி பாடல் ஒலிக்கிறது.
யுவராஜ்சிங்கின் இந்த பதிவு ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. யுவராஜ்சிங் தான் மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளதாக கூறியிருப்பதன் மூலம் அவர் மீண்டும் வீரராக களமிறங்க உள்ளாரா? அப்படி இறங்கினால் எந்த போட்டிகளில் அவர் ஆட உள்ளார்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய மூன்று உலக கோப்பைகளிலும் யுவராஜ்சிங்தான் முக்கிய பங்காற்றினார். 2007ம் ஆண்டு டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்ததை யாராலும் மறக்கவே முடியாது. அதேபோல, 2011ம் ஆண்டு உலககோப்பையிலும் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்து கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக வலம்வந்தார்.
யுவராஜ் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம், 11 அரைசதங்களுடன் 1900 ரன்களையும், 304 ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள், 52 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 701 ரன்களையும், 58 டி20 போட்டிகளில் 8 அரைசதங்களுடன் 1,188 ரன்களையும், 132 ஐ.பி.எல். போட்டிகளில் 2 ஆயிரத்து 750 ரன்களை 13 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். மேலும், சிறந்த சுழறபந்து வீச்சாளரான யுவராஜ்சிங் டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளையும், 58 டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்