WTC Final: இறுதிப்போட்டியில் அச்சுறுத்துவாரா கிங் கோலி? ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை எப்படி?
டெஸ்ட் போட்டிகளில் விராட்கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 8 சதங்களை விளாசியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி யுத்தம் நாளை இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. மகுடத்தை சூடப்போவது யார்? என்பதை தீர்மானிப்பதற்கான இந்த போட்டியில் இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாகவும், துருப்புச்சீட்டாகவும் இருப்பவர் விராட்கோலி. அதேபோல, ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் இருப்பவர் விராட்கோலி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விராட்கோலிக்கு மிகவும் பிடித்த அணி ஆஸ்திரேலியா ஆகும். விராட்கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இதுவரை சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
விராட்கோலி இதுவரை தான் ஆடியுள்ள 108 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 24 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளார். நாளை நடக்கும் போட்டி விராட்கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் 25வது டெஸ்ட் ஆகும்.
ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துவாரா விராட்கோலி?
விராட்கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் 42 இன்னிங்சில் ஆடி, 1979 ரன்களை விளாசியுள்ளார். அதில் 8 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். ஒரு முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அதிகபட்சமாக 186 ரன்களை விராட்கோலி எடுத்துள்ளார். விராட்கோலி இதுவரை தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டுமே இரட்டை சதம் அடிக்கவில்லை. மற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் விராட்கோலி இரட்டை சதம் விளாசியுள்ளார்.
விராட்கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இங்கிலாந்து மண்ணில் அவரது செயல்பாடு என்பது திருப்திகரமானதாக இல்லை. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் விராட்கோலி இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளார். அங்கு அவர் 6 இன்னிங்சில் 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த 3 போட்டிகளும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே நடைபெற்றது ஆகும். அந்த போட்டியில் விராட்கோலியின் தனிநபர் அதிகபட்சம் 50 ரன்களே ஆகும்.
ஆதிக்கம் செலுத்துவாரா?
விராட்கோலி அனைத்து மண்ணிலும் ஆதிக்கம் செலுத்தினாலும் அவருக்கு இங்கிலாந்து மண் மட்டும் சற்று சிரமமானதாக அமைந்துள்ளது. ஆனால், இந்த முறை அவருக்கு பிடித்தமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் களமிறங்குவதால் ஆதிக்கத்தை விராட்கோலி நிலைநாட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். விராட்கோலி இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் 183 இன்னிங்சில் பேட் செய்து 8 ஆயிரத்து 416 ரன்கள் விளாசியுள்ளார். அதில், 28 சதங்கள், 7 இரட்டை சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 254 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: WTC Final 2023: ஓவல் மைதானத்தில் அடி மேல் அடி வாங்கும் ஆஸ்திரேலியா..! 140 ஆண்டுகால வரலாறு சொல்வது என்ன?
மேலும் படிக்க:WTC Final 2023: இறுதிப்போட்டியில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தா..? இஷான் கிஷானா..? ஹிட்மேன் தேர்வு யார்?