WTC 2023: டெஸ்ட் அணியில் ஓரங்கப்பட்ட 5 இந்திய வீரர்கள்.. WTC இறுதிப்போட்டிக்கு பிறகு ஓய்வு... யார் அந்த வீரர்கள்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு சில இந்திய வீரர்கள் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் என்ற 5 இந்திய வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்...
ஜூன் மாதம் நடைபெறவிள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் ஸ்டேடியத்தில் வருகின்ற ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்கு இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸும் தலைமை தாங்குகின்றனர்.
இந்த போட்டிக்கு பிறகு சில இந்திய வீரர்கள் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் என்ற 5 இந்திய வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்...
1. விருத்திமான் சஹா:
இந்த பட்டியலில் முதல் இந்திய வீரர் விருத்திமான் சஹா. 38 வயதான சஹா ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். எம்.எஸ். தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபோது இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்ந்தார். இவர் கடைசியாக இந்திய அணிக்காக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். ஏறக்குறைய 2 ஆண்டுகள் மேலாகியும், சஹா இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பவில்லை.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பண்ட் காயம் காரணமாக விளையாடாதபோது சஹா தேர்வு செய்யப்படவில்லை. பண்ட்டுக்கு பதிலாக கே.எஸ். பாரத்தே விக்கெட் கீப்பராக களமிறங்கினார். எனவே, சஹா டெஸ்ட் அணிக்கு திரும்புவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23க்குப் பிறகு டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவிக்கலாம்.
2. இஷாந்த் சர்மா:
2021 ம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்கத்தில் இஷாந்த் சர்மா, இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் திகழ்ந்தார். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் ஓரங்கட்டப்பட்டார். இவர் இதுவரை இந்திய அணிக்காக இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், இந்திய அணிக்காக இவர் கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கினார். எனவே, வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கலாம்.
3. ஜெயந்த் யாதவ்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெறக்கூடிய மற்றொரு இந்திய வீரராக ஜெயந்த் யாதவ் இருக்கலாம். ஆல்-ரவுண்டராக அறியப்படும் ஜெயந்த் யாதவ் இந்திய அணிக்காக ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இவர் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அப்போட்டியில் வெறும் 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியதால் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். தற்போது ரவிசந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பது வீச்சாளர்கள் டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இவரது இடம் சந்தேகம்தான்.
4. புவனேஷ்வர் குமார்:
புவனேஷ்வர் குமார் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவுக்காக எந்தவொரு போட்டியில் விளையாடவில்லை. கடந்த மாதம் பிசிசிஐ வெளியிட்ட மத்திய ஒப்பந்தங்களில் இவரது பெயர் இல்லை.
கடந்த ஆண்டு, புவனேஷ்வர் குமார் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் வெளியானது. ஆனால், அது எதுவும் உண்மை இல்லை என பின்னர் அறிவிக்கப்பட்டது. புவனேஷ்வர்குமார் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நீண்ட நாட்களாகிவிட்டது. இவர் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை.
5. உமேஷ் யாதவ்:
இந்த பட்டியலில் கடைசியாக நாம் பார்க்கப்போகும் நபர் உமேஷ் யாதவ். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடிய உமேஷ் யாதவ், ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி 3 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க ஏற்கனவே கடுமையாக உழைத்து வருகின்றனர். 2020 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில், உமேஷ் யாதவ் ஒவ்வொரு ஆண்டும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
வருகின்ற போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், உமேஷ் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கலாம்.