(Source: ECI/ABP News/ABP Majha)
முதன்முதலாக டெஸ்ட் போட்டி ‛டை’ ஆன நாள் இன்று: 1877ல் ஆஸி-வெ.இ., நடத்திய தனி ஆவர்த்தனம்!
ஒரு ரன் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி. ஒரு விக்கெட்டை எடுத்தால் மேற்கிந்திய தீவுகள் தோல்வியை தவிர்க்கலாம் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், 100 பந்துகள் கிரிக்கெட் என்று இன்று கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றின் ஆதி டெஸ்ட் கிரிக்கெட்டே ஆகும். அத்தகைய டெஸ்ட் கிரிக்கெட் முதன்முதலாக 1877ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி ஆஸ்திரேலியாவிற்கும், இங்கிலாந்திற்கும் எதிராக அதிகாரப்பூர்வமான முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக தொடங்கியது.
அதன்பின் சுமார் 80 ஆண்டுகளாக வெற்றி, தோல்வி, டிரா என்று நகர்ந்து கொண்டிருந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக ஒரு அதிசயம் நிகழ்ந்தது இன்றைய தினம்தான். ஆம். டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஒரு டெஸ்ட் போட்டி டை ஆனது இன்றைய தினம்தான்.
1960ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அந்தாண்டு டிசம்பர் 9-ந் தேதி பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் ஜாம்பவான் கிரிக்கெட்டர் கேரி சோபர்சின் அசத்தலான சதத்தின் (132) ரன்கள் உதவியுடன் 453 ரன்களை குவித்தது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பாப் சிம்சனின் 92 ரன்கள் மற்றும் நார்ம் ஓ நெயிலின் அபார சதத்தினால் (181) முதல் இன்னிங்சில் 505 ரன்களை குவித்தது. தொடர்ந்த இரண்டாவது இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ரோகன் கங்காய் 54 ரன்கள், கேப்டன் ப்ராங்க் வொர்ரல் 65 ரன்கள், ஜோ சாலமன் 47 ரன்கள் உதவியுடன் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், ஆஸ்திரேலியா அணிக்கு 233 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
233 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் இன்னிங்சில் அசத்திய பாப் சிம்ப்சன் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நெயல் ஹார்வே 5 ரன்களுக்கும், காலின் மெக்டொனால்ட் 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதமடித்த நார்ம் ஓ நெயில் 26 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். 92 ரன்னுக்கு 6 விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரிச்சி பெனட்டும், ஆலன் டேவிட்சனும் நங்கூரமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தோல்வியின் பிடியில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியாவை வெற்றியின் அருகில் வரை அழைத்துவந்துவிட்டனர். வெற்றிக்கான இலக்கை அடைய 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பொறுப்புடன் ஆடிக்கொண்டிருந்த ஆலன் டேவிட்சன் 194 பந்துகளில் 80 ரன்களில் ரன் அவுட்டானார்.
மறுமுனையில், கேப்டன் ரிச்சர்ட் பெனட் இருந்ததால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அணியின் ஸ்கோர் 228 ரன்களை எட்டியபோது கேப்டன் ரிச்சர்ட் பென்னட் 136 பந்துகளில் 52 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அப்போது களமிறங்கிய வால்லி கிரவுட் 2 ரன்களும், இயான் மெக்கெப் 2 ரன்களும் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னிலை ஸ்கோரான 232 ரன்களை சமன் செய்தனர். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் கேலரியில் ஆவலுடன் காத்திருக்க, வாலி கிரவுட் ரன் அவுட்டானார். ஒரு ரன் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி. ஒரு விக்கெட்டை எடுத்தால் மேற்கிந்திய தீவுகள் தோல்வியை தவிர்க்கலாம் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, களத்தில் இருந்த இயான் மெக்கப் வெஸ் ஹால் பந்தில் ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு, பரிதாபமாக ரன் அவுட்டானார். இதனால், தோல்வியின் விளிம்பு வரை சென்ற மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தை டை செய்தது. வெற்றியின் விளிம்பு வரை வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றி பெறாமல் கோட்டை விட்டனர். இதன்மூலம், உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டை ஆன டெஸ்ட் என்ற சாதனையை இந்த போட்டி படைத்தது.