Politics In Cricket: விளையாட்டில் எதற்கு வன்ம அரசியல்.. பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிற்கு எதிரானதா?
Politics In Cricket: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு கொடுத்ததற்காக, சென்னை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
![Politics In Cricket: விளையாட்டில் எதற்கு வன்ம அரசியல்.. பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிற்கு எதிரானதா? world cup 2023 Why this brutal politics in sports. Is it wrong to support Pakistan team? Politics In Cricket: விளையாட்டில் எதற்கு வன்ம அரசியல்.. பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிற்கு எதிரானதா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/99a2d0e760693dd74280a276ea059b601698479351675732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Politics In Cricket: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு சென்னை ரசிகர்கள் ஆதரவு கொடுத்ததை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
”திறமைகளை கொண்டாட நாட்டின் எல்லைகளும், அரசியலும் என்றும் ஒரு தடையாக அமையக் கூடாது. அதனை பறைசாற்றும் விதமாகவே பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் என பலரும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட நாட்டவர்களை மட்டும் யாருமே கொண்டாடக் கூடாது என்பதை போன்ற நிகழ்வு ஒன்று, இந்தியாவில் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது. பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு கொடுத்த சென்னை ரசிகர்களை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருவது தான் அந்த நிகழ்வு.”
அகமதாபாத்தில் சர்ச்சை..
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி, அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் ரிஸ்வான் ஆட்டமிழந்து சென்றபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவரை நோக்கி, ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், இந்து மத பாடல்கள் மட்டுமே மைதானத்தில் ஒலிபரப்பப்பட்டதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான பாடல்கள் எதுவும் ஒலிபரப்பப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
சென்னையில் ஆதரவு..
மைதானத்தில் ஜெய் ஸ்ரீராம் என முழங்கப்பட்டதற்கு, தமிழக அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், விளையாட்டு என்பது சகோதரத்துவத்தை ஊக்குவிப்பது எனவும் கூறினார். இதைதொடர்ந்து, கடந்த 23ம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், நேற்று தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராகவும் சென்னையில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த போட்டிகளின் போது பாகிஸ்தான் அணிக்கு சென்னை ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். அந்த அணியின் ஜெர்சி ஆகியவற்றை அணிந்து மைதானத்திற்கு சென்று, ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
தொடர் தோல்வி:
அகமதாபாத்தில் கிடைக்காத ரசிகர்களின் ஆதரவு சென்னையில் விளையாடியபோது பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தது. ஆனாலும், பாகிஸ்தானால் வெற்றி வாகை சூட முடியவில்லை. கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடந்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்:
விளையாட்டு என்பது அரசியல் மற்றும் வெறுப்புணர்வை கடந்தது. அதை பறைசாற்றும் விதமாகவே பாகிஸ்தான் அணிக்கு சென்னை ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால், இதனை ஒரு தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. வெறுப்புணர்வை தூண்டி விடும் விதமாகவும் சிலர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, பாகிஸ்தான் அணிக்கு மைதானத்தில் சென்னை ரசிகர்கள் ஆதரவு தரும் வீடியோவை பகிர்ந்த ஒருவர், ”நம் பாதுகாப்பிற்காக இந்திய எல்லையில் ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் நிக்குற ஒவ்வொரு ராணுவ வீரனும் இதைப்பார்த்தால் பெருமைப்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார். ”பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்குற இவங்க தான் அறிவார்ந்த ரசிகர்களாம், திமுகவினர் ஆதரவு அளித்ததால் தான் பாகிஸ்தான் தொடர்ந்து தோல்வியுற்று வருகிறது” என்றும் கிண்டலடித்து வருகின்றனர். இதைவிட மோசமான கருத்துகளையும், வன்மமான அரசியல் பதிவுகளையும் பலர் முன்வைத்து வருகின்றனர்.
என்னங்க சார் உங்க நியாயம்?
விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல்வேறு பிராந்தியங்களில் உள்ள நாடுகளை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்கும் ஒரு கருவியாகும் உள்ளது. விருப்பு, வெறுப்புகளை மறந்து அனைவரும் மனிதம் எனும் ஒரே குலத்தவர் என்பதை உணர வைக்கும் முக்கிய அம்சமாகவும் விளையாட்டுகள் திகழ்கின்றன. அந்த வகையிலான ஆதரவை தான் பாகிஸ்தான் அணிக்கும், சென்னை ரசிகர்கள் கொடுத்தனர். பாகிஸ்தானின் போட்டியை சென்னை ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், அரசியல் மற்றும் எல்லை பாதுகாப்பு போன்ற முக்கிய விவகாரங்களில் முரணாக உள்ள, பாகிஸ்தான் அணிக்கு இந்தியர்கள் யாரும் ஆதரவு கொடுக்கக் கூடாது என சில கட்சியினர் வலியுறுத்துவது நியாயமா?
பழிக்குப் பழி நல்லதா?
இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்றபோது உரிய மரியாதை கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் நாம் மட்டும் அவர்களுக்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் என சிலர் பேசுகின்றனர். விருந்தோம்பல் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்றால் நாமும் அப்படி தான் நடந்துகொள்ள வேண்டுமா? விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை செயல்களால் அல்லவா அவர்களின் தவறை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். அதைவிடுத்து பழிக்கு பழி வாங்குவேன் என்று இறங்குவதால், அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
குறுகலான பார்வை:
கிரிக்கெட்டில் மட்டுமின்றி எந்தவித விளையாட்டிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே, அது பெரும் போர் என்பதை போன்று தான் விளம்பரப்படுத்தப்படுகிறது. தங்களது வருவாய்க்காக சில தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் செய்த விளம்பரங்களும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான வன்மம் சில இந்திய ரசிகர்கள் இடையே உருவெடுக்க காரணமாகியுள்ளது. விளையாட்டை திறமைக்கான ஒரு மேடையாகவும், பொழுதுபோக்காகவும் மட்டுமே கருதினால், எந்தவொரு நாட்டவரின் திறமையயும் உற்சாகமாக கொண்டாடலாம். ஆனால், விளையாட்டை அரசியலுக்கும், ஒரு மதத்திற்கான அடையாளமாகவும் மாற்ற முயற்சித்தால் ரசனை என்பது குறுகலாக சுருங்கத் தான் செய்யும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)