World Cup 2023: இது புதுசு! கீரிஸில் அவுட்டாகாமல் நீண்டநேரம்.. மேலும் ஒரு சாதனை பட்டியலில் இணைந்த விராட் கோலி..!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரை கோலி சமீபத்தில் சமன் செய்துள்ளார்.
உலகக் கோப்பை 2023ல் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி அற்புதமாக பேட்டிங் செய்து தனது பெயரில் பல சாதனைகளை படைத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரை கோலி சமீபத்தில் சமன் செய்துள்ளார். இதனுடன் மேலும் ஒரு சிறப்பு சாதனையும் விராட் கோலி பெயரில் பதிவாகியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் பேட்டிங்கிற்காக அதிக நேரம் கிரீஸில் இருந்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். கோலிக்கு போட்டியாக அருகில் எந்தவொரு பேட்ஸ்மேனும் அருகில் இல்லை.
ஊடக அறிக்கையின்படி, இந்த உலகக் கோப்பையில் விராட் இதுவரை பேட்டிங்கிற்காக சுமார் 14 மணி நேரம் 39 நிமிடங்கள் கிரீஸில் செலவிட்டார். இந்த பட்டியலில் மற்ற இந்திய வீரர்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் 8 மணி நேரம் 23 நிமிடங்கள் செலவிட்டார். இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் 7 மணி நேரம் 20 நிமிடங்கள் செலவிட்டு மூன்றாவது இடத்தில் உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்திலும், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சுப்மன் கில் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் 6 மணி 29 நிமிடங்கள் செலவிட்டுள்ளார். அதேசமயம் கில் 5 மணி நேரம் 52 நிமிடங்கள் செலவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை 2023ல் 500 ரன்களை கடந்த கோலி:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக, அவர் ஏழு இன்னிங்ஸ்களில் மொத்தம் 442 ரன்கள் எடுத்திருந்தார். இந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்தார். இதன்மூலம், ஒருநாள் உலகக் கோப்பையில் விராட் கோலி முதல் முறையாக இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
அதேபோல், ஒரு உலகக் கோப்பை பதிவில் 500 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் (இரண்டு முறை) மற்றும் ரோஹித் சர்மா மட்டுமே உலகக் கோப்பைப் பதிப்பில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்திருந்த இந்திய வீரர்கள்.
இந்த உலகக் கோப்பையில் விராட் கோலியின் செயல்திறன்:
2023 உலகக் கோப்பையில் கோலியின் ஆட்டமானது இதுவரை சிறப்பாகவே இருந்து வருகிறது. கோலி இந்த உலகக் கோப்பை இதுவரை இரண்டு சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கோலி ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடிக்க முயற்சித்து 95 ரன்களில் அவுட்டானார். அதேபோல், இலங்கைக்கு எதிராக 88 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை 2023ல் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதை தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி நவம்பர் 15 ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி நவம்பர் 16 ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.