T20 WC Prize Money: பரிசுத்தொகையில் பாரபட்சம்...! இதுலயுமா ஆண், பெண் பாகுபாடு..? டி20 உலகக்கோப்பையில் அரங்கேறிய அவலம்..!
T20 Worldcup Prize: மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் ஆண்கள் டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையில் பாரபட்சம் இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 6வது முறையாக உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா:
வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம்பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு 5 லட்சம் டாலர் பரிசுத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. குரூப் சுற்றிலே வெளியேறிய அணிகளுக்கு ரூபாய் 30 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
குரூப் சுற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா ரூபாய் 17 ஆயிரத்து 500 டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதாவது, மொத்தமாக மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை ரூபாய் 2.45 மில்லியன் ஆகும். உலகெங்கிலும் பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தாலும் பாரபட்சம் என்பது இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது ஆண்கள் கிரிக்கெட்டிற்கும், பெண்கள் கிரிக்கெட்டிற்கும் இடையேயும் இருக்கிறது என்பதுதான் வேதனையான ஒன்றாகும்.
பரிசுத்தொகையில் பாரபட்சம்:
கடந்தாண்டு நடைபெற்ற ஆண்கள் டி20 உலகக்கோப்பையில் கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணிக்கு ரூபாய் 8 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
அரையிறுதியில் தோல்வியை தழுவிய அணிகளுக்கே சுமார் 4 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மொத்தத்தில் ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் பரிசுத்தொகை 5.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், பெண்கள் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடரில் 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது.
ஆண்கள் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடரை காட்டிலும் பெண்கள் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடருக்கு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு குறைவான பரிசுத்தொகையே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டித்தொடரை உலகெங்கிலும் பிரபலமாக்க ஐ.சி.சி.யும் பல்வேறு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிலை மாறுமா?
2000ம் ஆண்டுகளுக்கு பிறகே உலகெங்கிலும் மகளிர் கிரிக்கெட் அதிகளவில் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் ஆண்களுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது நடப்பாண்டு முதல்தான் பெண்களுக்கான பிரீமியர் லீக் நடத்தப்பட உள்ளது. பெண்கள் விளையாட்டு துறையில் முன்னேறுவதற்கு இந்தியாவில்தான் ஏராளமான தடைகள் இருந்து வரும் நிலையில், வெளிநாட்டில் அவர்களுக்கான வாய்ப்புகள் நன்றாகவே கிடைத்து வருகிறது. ஆனாலும், இதுபோன்று ஆண்களுக்கான பரிசுத்தொகையுடன் ஒப்பிடும்போது பாரபட்சத்துடன் பெண்கள் கிரிக்கெட்டிற்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டிருப்பது கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வீராங்கனைகளும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: ICC WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இது நடந்தால் இறுதிப்போட்டியில் இந்தியா..! அப்போ ஆஸ்திரேலியா கதி?
மேலும் படிக்க: உயிருக்கு போராடிய மனைவி.. விசா இல்லாமல் தவித்த வாசிம் அக்ரம்.. சென்னையில் அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!