WPL 2023: தூள் கிளப்பும் மகளிர் பிரிமீயர் லீக்.. இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் - டெல்லி, உத்தரப்பிரதேசம் - குஜராத் அணிகள் மோதல்..!
மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ், உத்தரப்பிரதேச வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.
மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ், உத்தரப்பிரதேச வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.
இந்தியாவில் கடந்த 15 சீசன்களாக நடைபெற்று வந்த ஆண்களுக்காக ஐபிஎல் தொடர் போன்றே மகளிருக்கான டி20 ஓவர் பிரிமியர் லீக் தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மும்பையில் நேற்று முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 தொடர் கோலகலமாக தொடங்கியது.
நடிகைகள் க்ரித்தி சனோன், கியாரா அத்வானி ஆகியோரின் சிறப்பு நடனங்கள் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் அணி - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று நடக்கும் ஆட்டங்கள்
மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஹீதர் நைட், எரின் பர்ன்ஸ், ரிச்சா கோஸ்சும், பந்து வீச்சைப் பொறுத்தவரை மேகன் ஸ்கட், ஆல் ரவுண்டர்களாக எலிஸ் பெர்ரி, சோபி டெவின், டேன் வான், நீ கெர்க் என ஒரு படையே தங்கள் பலத்தை நிரூபிக்க காத்திருக்கிறது.
அதேசமயம் டெல்லி அணியில், மெக் லானிங், அலிஸ் கேப்சி, ஷபாலி வர்மா, லாரா ஹாரிஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், ஜெஸ் ஜோனசென், பூனம் யாதவ், ராதா யாதவ், ஷிகா பாண்டே, மரிஜானே காப் ஆகியோர் பந்துவீச்சிலும் தூள் கிளப்புவார்கள் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் 4 முறை ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பை வென்று கொடுத்த மெக் லானிங் டெல்லி அணிக்கு கேப்டனாக உள்ளார் என்பது அந்த அணிக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
உத்தரப்பிரதேசம் - குஜராத் அணிகள்
இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் தொடங்கும் போட்டியில் உத்தரப்பிரதேசம் - குஜராத் அணிகள் மோதுகின்றது.
உத்தரப்பிரதேச அணியை பொறுத்தவரை கேப்டன் அலிசா ஹீலி, துணை கேப்டன் தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரி, சோபி எக்லெஸ்டன், ஷப்னிம் இஸ்மாயில், தாலியா மெக்ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட், உள்ளிட்டோர் சிறந்த பார்மில் உள்ளனர்.
அதேசமயம் குஜராத் அணியில் கேப்டன் பெத் மூனி, ஹர்லீங் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்விரு போட்டிகளும் ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகின்றது.