Ashwin In Tests: இந்தியாவே கொண்டாடும் அஸ்வின்..! டெஸ்ட் அணிக்கு ஏன் முக்கியம்?.. அவர் சாதித்தது என்ன?
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிளேயிங் லெவனில் இல்லாததே காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிளேயிங் லெவனில் இல்லாததே காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி படுதோல்வி:
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால், இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்கள் என்பது தோல்விக்கு பிறகு அல்ல, முதல் நாள் வெளியான பிளேயிங் லெவன் பட்டியலில் அஸ்வினின் பெயர் இல்லாதபோதிலிருந்தே தொடங்கி விட்டது. ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் என பலரும், இந்திய அணியின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.
மனதளவில் தோற்ற இந்தியா:
அஸ்வின் அணியில் இல்லை என்று தெரிந்த போதே இந்திய அணி மனதளவில் தோற்றுவிட்டதாக ஷேவாக்கும், அஸ்வின் போன்ற வீரர்கள் மைதானத்தை நம்பி இல்லை தங்களது திறமையால் விக்கெட்டை வீழ்த்தக்கூடியவர்கள் என சச்சினும் கருத்து தெரிவித்துள்ளனர். இதே போன்று கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும், அஸ்வின் இறுதிபோட்டியில் அணியில் இடம்பெறாததற்கு கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். அவர் விளையாடி இருந்தால் போட்டியின் முடிவு என்பது வேறுமாதிரியாக இருந்து இருக்கும் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியாவுமே நம்பும் விதமாக, டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அப்படி என்ன தான் செய்து இருக்கிறார் என்பதை இங்கு அறியலாம்.
ஏன் அஸ்வின்..!
அஸ்வின் வழக்கமான ஆஃப் ஸ்பின்னர் போலல்லாமல் பல்விதமான வேரியேஷன்களை தன்னகத்தே கொண்டுள்ள உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். தைரியமாக பந்தை தூக்கி போடுவதில் வல்லவர். வேகத்தில் அடிக்கடி மாற்றங்களை செய்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். கேரம் பால் மற்றும் ஸ்லைடர் என்பது போன்ற நுட்பமான மாறுபாடுகளால், பந்துவீச்சில் புதிய பரிமாணங்களையே வைத்துள்ளார். பிளாட் டிராக்குகளில் கூட காற்றிலேயே பந்தை திருப்பி விக்கெட் வீழ்த்த வல்லவர். இதனால், வலது மற்றும் இடது கை என, இரண்டு விதமான பேட்ஸ்மேன்களுக்குமே சவாலாக விளங்குகிறார்.
வெளிநாட்டிலும் அபாரம்:
ஆரம்ப காலம் முதலே இந்திய மைதானங்களிலும், ஆசிய கண்டத்தில் உள்ள மைதானங்களிலும் அஸ்வின் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தொடக்கத்தில் வெளிநாட்டு மைதானங்களில் பெரிதாக சோபிக்காவிட்டாலும், தற்போது தனது அனுபவத்தின் அடிப்படையில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். தனது வேரியேஷன்ஸ் மற்றும் பலவகையான பந்துவீச்சுகளால் எதிரணியை திணறடித்து வருகிறார். முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பது, வலுவான பார்ட்னர்ஷிப்களை உடைப்பது என்பதோடு, லோயர்-ஆர்டரில் இந்திய அணிக்கான முக்கிய பேட்ஸ்மேன் ஆகவும் செயல்பட்டு வருகிறார். இதனால், இந்திய அணி உருவாக்கிய ஒரு பெரிய மேட்ச்- வின்னராக அஸ்வின் கருதப்படுகிறார்.
இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எமன்..!
குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்குவதில், அஸ்வின் வல்லவராக விளங்கி வருகிறார். அவர் எடுத்துள்ள 470-க்கும் அதிகமான விக்கெட்டுகளில் 230-க்கும் அதிகமானவை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் தான். வேறு எந்த சுழற்பந்துவீச்சாளரும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியதில்லை. நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் கூட 26 இன்னிங்ஸ்களில் களமிறங்கி, 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி சார்பில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் இவர் தான். பந்துவீச்சின் போது பிட்ச்சின் இரு முனைகளில் இருந்தும் நெருக்கடி தரும் அஷ்வின் இன்சைட் மற்றும் அவுட்சைட் எட்ஜ், ஸ்லிப், ஷார்ட் லெக் மற்றும் சில்லி பாயிண்ட்களிலும் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.
சாதனைகள்:
இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 474 விக்கெட்டுகளை குவித்துள்ளார். அதில் அதில் 32 முறை 5 விக்கெட்ஸும், 7 முறை 10 விக்கெட்ஸும் அடங்கும். அவரது சிறந்த பந்துவீச்சு என்பது 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகும். விக்கெட் எடுக்கும் அவரது சரசாரி என்பது வியக்கத்தகும் வகையில் 24-க்கும் குறைவாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 250 மற்றும் 300வது விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அதோடு பேட்டிங்கில் 5 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் உட்பட 3129 ரன்களை குவித்துள்ளார். இத்தகைய அபரிவிதமான சாதனைகள் காரணமாக தான், இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மிக முக்கிய வீரராக தொடர்ந்து வருகிறார்.