WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. டிரா ஆனால் கோப்பை யாருக்கு?..ரிசர்வ் டே எப்படி வரும்..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சமனில் முடிந்தால் வெற்றி யாருக்கு, ரிசர்வ்-டே எப்படி பயன்படுத்தப்படும் என்பது தொடர்பான தகவல்களை விரிவாக அறியலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சமனில் முடிந்தால் வெற்றி யாருக்கு, ரிசர்வ்-டே எப்படி பயன்படுத்தப்படும் என்பது தொடர்பான தகவல்களை விரிவாக அறியலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியுற்று கோப்பையை கோட்டைவிட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் எனும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.
போட்டி சமனில் முடிந்தால்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் முடிவுகளை அறிய, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 5 நாட்களே அதிகம் தான். ஆனால், போட்டி சமனில் முடிவடையவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு, போட்டி ஒருவேளை சமனில் முடிந்தால், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டு, இருவருமே வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவர். போட்டியில் யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர் என்பது போன்ற எந்த விஷயங்களும் கருத்தில் கொள்ளப்படமால், இருவருக்குமே கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். மற்ற ஐசிசி தொடர்களில் இருப்பது போன்ற பவுண்டரிகளின் எண்ணிக்கை, சூப்பர் ஓவர் மற்றும் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணி என்பது போன்ற அணுகூலங்களின் அடிப்படையில் எந்தவொரு அணிக்கும் வெற்றி என்பது வழங்கப்பட மாட்டாது.
ரிசர்வ் டே எப்படி பின்பற்றப்படும்?
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் விதிகளின் படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் ரிசர்வ் டே பின்பற்றப்படுகிறது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் மட்டுமே இந்த ரிசர்வ் டே பயன்படுத்தப்படும். போட்டியின் 5 நாட்களில் சில மணி நேரங்கள் மட்டும் மழையால் பாதிக்கப்பட்டு இருந்தால், ஒருவேளை வெற்றியாளரை உறுதி செய்ய கூடுதல் நேரம் தேவைப்பட்டால், மழையால் விளையாட முடியாமல் போன அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ரிசர்வ் டே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்:
உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 5 கேப்டன்கள், 2 பயிற்சியாளர்கள் உடன் 6 தொடர்களில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றிகள் மற்றும் 5 போட்டிகளில் தோல்விகளை கடந்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. சொந்த மண்ணில் நடந்த அனைத்து தொடர்களையும் வென்ற இந்திய அணி, வெளிநாட்டு தொடர்களில் 1 தோல்வி மற்றும் 1 டிராவை சந்தித்தது.